விவசாயிகளுக்கு 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி – உத்தவ் தாக்ரே

0
112

மராட்டிய மாநிலத்தில், வறட்சி, போதிய விளைச்சல் இன்மை, விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக மரத்வாடா மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் புதிதாக பதவியேற்ற சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்துள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று நாக்பூரில் நடந்த சட்டசபை கூட்டத்தில் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் “இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நிலுவையில் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த கடன் தள்ளுபடியின் உச்சவரம்பு ரூ. 2 லட்சம் ஆகும். இது ‘மகாத்மா ஜோதிராவ் புலே கடன் தள்ளுபடி திட்டம்’ என அழைக்கப்படும்.” என்றார்.

இதைதொடர்ந்து பேசிய நிதி மந்திரி ஜெயந்த் பாட்டீல், “இந்த விவசாய கடன் தள்ளுபடி எந்தவித நிபந்தனையும் அற்றது. இதுகுறித்த விவரங்கள் உரிய நேரத்தில் முதல்-மந்திரி அலுவலகத்தால் வெளியிடப்படும்” என்றார்