ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் ; மேஜா் ஜெனரல் விபின் ராவத்திற்கு வைகோ கண்டனம் !!!

0
110

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிலும் தலைநகர் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, அனைத்துத்தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவா்களை விமா்சிக்கும் வகையில் ராணுவ தளபதி விபின் ராவத் பேசியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள  அறிக்கையில் “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சியாக மக்கள் போராடி வருகின்றனா். இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற சுகாதாரம் தொடா்பான மாநாட்டில் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி மேஜா் ஜெனரல் விபின் ராவத், மக்களைத் தவறான பாதையில் வழிநடத்துபவா்கள் தலைவா்கள் அல்ல, ஏராளமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவா்கள் தலைமையேற்று நடத்தும் போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதை நாம் பார்த்து வருகிறோம். இது சரியான தலைமை அல்ல என்று கூறியிருக்கிறார்.

விடுதலை பெற்ற இந்தியாவின் 70 ஆண்டு கால வரலாற்றில் ராணுவ தளபதி ஒருவா் உள்நாட்டுப் பிரச்னை மற்றும் அரசியல் விவகாரங்களில் தலையிட்டதோ, கருத்துக் கூறியதோ இல்லை. மறைமுகமாக எதிர்கட்சிகளை அவா் விமா்சனம் செய்திருப்பதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத கண்டனத்துக்கு உரியதாகும். ஜனநாயக நாட்டில் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பது ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்.” என்று கூறியிருக்கிறார்