அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் பாஜகவை கண்டிக்கும் வைகோ

0
129
Vaiko criticise central government

அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் பாஜகவை கண்டிக்கும் வைகோ

பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த முயற்சிக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கையேட்டில் முஸ்லிம் பண்டிகைகள் நீக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய பா.ஜ.க. அரசு, எதேச்சதிகாரப் போக்குடன் நடைமுறைப்படுத்த முனைந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடெங்கும் போராட்டங்கள் எரிமலையென வெடித்துள்ளன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைக்கவும், குடிமக்கள் திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்த பா.ஜ.க. துடிக்கிறது.

இந்திய அரசுக்கு எதிராக உலக அரங்கத்தில் எழுந்துள்ள கண்டனங்களையும் மோடி அரசு பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (சூஞசு) நடத்துவதற்கு உத்தரவிட்டு இருக்கிறது. இதற்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலம் மற்றும் கிரிகோரியன் மாதங்களுடன் தொடர்புடைய முக்கியமான திருவிழாக்கள் என்ற பட்டியல் தரப்பட்டுள்ளது.

அதில் வழக்கமாகக் கொண்டாடப்படும் இந்து மதப் பண்டிகைகள் மற்றும் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, கிறிஸ்துமஸ், குருநானக் ஜெயந்தி, குருகோவிந்த் சிங் ஜெயந்தி மற்றும் புத்தபூர்னிமா போன்ற சமண, சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த பண்டிகைகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் முஸ்லிம் பண்டிகைகளான ரம்ஜான், மிலாடி நபி போன்றவை இடம்பெறவில்லை.

இந்திய நாட்டின் மக்கள் தொகையில், 13 விழுக்காடாக உள்ள கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் பண்டிகைகளை திட்டமிட்டே பாரதிய ஜனதா அரசு மக்கள் தொகைப் பதிவேட்டின் கையேட்டில் புறக்கணித்து இருக்கிறது. இது மோடி அரசின் அப்பட்டமான இந்துத்துவா மதவாத சனாதன மனப்பான்மையைக் காட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா அடிப்படைக் கொள்கையான இந்துராஷ்டிரத்தைக் கட்டி அமைக்க அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதையும், அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்துவதையும் இந்நாட்டு மக்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு கடும் கண்டனத்துக்குரியது. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு கையேட்டில் இசுலாமிய பண்டிகைகளையும் உடனடியாகச் சேர்க்க வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சி அரசு அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மேற்குவங்காளம், கேரளா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநில அரசுகள் தேசிய மக்கள் தொகைத் திட்ட பதிவேடு பணியை மேற்கொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ளன.

“மக்கள் தொகைச் சட்டம் மற்றும் குடிமக்கள் சட்டம் 2003ன் படி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிகளை மத்திய – மாநில அரசு ஊழியர்கள் மேற்கொள்வது கட்டாயமாகும். இந்தப் பணிகளைச் செய்ய மறுக்கும் அரசு ஊழியர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உளளது. மேலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்று மத்திய பா.ஜ.க. மிரட்டல் விடுத்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்தந்த தேசிய இனங்களின் உணர்வுகளைத்தான் மாநில அரசுகளின் கருத்துகள் பிரதிபலிக்கின்றன. அவற்றை அலட்சியப்படுத்திவிட்டு, பாசிச சர்வாதிகார முறையில் மாநில அரசுகளை மிரட்டுவதும், அரசு ஊழியர்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு மிரட்டல் விடுப்பதும் கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
மக்களாட்சிக்கு எதிரான பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்குகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.