Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகம் பட்டினி பிரதேசமாகி விட கூடாது! திமுகவை ஆதரித்து வைகோ பிரச்சாரம்

தமிழகம் பட்டினி பிரதேசமாகி விட கூடாது! திமுகவை ஆதரித்து வைகோ பிரச்சாரம்

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று இரவு கெடார், விக்கிரவாண்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் அங்கு பேசியதாவது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் மத்தியில் திட்டமிட்டபடி ஆட்சி அமையவில்லை. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் இது நிறைவேறும். ஸ்டாலின் அறிவித்ததை செய்து தருவார்.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ.1,450 கோடி வழங்க வேண்டி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இதனை தருவார்களா? என்றால் நம்பிக்கை இல்லை.

மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதோடு இந்துத்துவாவை நிலைநிறுத்த பார்க்கிறது மோடி அரசு. இதை எதிர்க்க அ.தி.மு.க. அரசுக்கு திராணி கிடையாது.

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும், எதிர்த்து போராடவும் இந்த அரசுக்கு திராணி கிடையாது. வேளாண் பாதுகாப்பு மண்டலம் அமைக்க வேண்டும் என்று நாமெல்லாம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். ஆனால் அதை அமைக்காமல் பெட்ரோலிய கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை தடுக்க தமிழக அரசுக்கு சக்தி இல்லை. இதனால் விவசாய விளைநிலங்கள் பாழாகி வருகிறது.

தமிழகம் பாலைவனமாகி விடக்கூடாது, பட்டினி பிரதேசமாகி விடக்கூடாது. இதற்கு இந்த ஆட்சி முதலில் தூக்கி எறியப்பட வேண்டும். தமிழர்களின் நலனை காக்க, விவசாயிகளின் நலனை காக்க தி.மு.க. ஆட்சி மலர வேண்டும். தமிழகத்தின் எதிர்காலத்தை காப்பாற்ற தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version