பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா?

0
247
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா?

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் சார்பாக போராட்டம் அறிவிக்கபட்டிருந்தது.அதன் முதற்கட்டமாக தமிழக அரசின் முறையான அனுமதியுடன் சென்னையில் பாமகவினர் போராட்டத்தை தொடங்கினர்.இதனையடுத்து சென்னைக்கு அருகிலுள்ள பாமகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையை நோக்கி வாகனங்களில் வரத் தொடங்கினர்.ஆனால் பாமகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மட்டும் போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லவும்,மற்றவர்கள் செல்ல வேண்டாம் என்றும் காவல் துறையினர் தடுத்துள்ளனர்.

இதனையடுத்து சென்னைக்கு அருகேயுள்ள பெருங்களத்தூர் பகுதியில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் போது பெருங்களத்தூர் அருகே வந்த ரயிலை மறித்து பாமகவினர் போராட்டம் நடத்தியது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.அதுவரை இந்த போராட்டத்தை கண்டு கொள்ளாமல் புறக்கணித்து வந்த தமிழக ஊடகங்களும் இந்த விவகாரத்தை பெரிய விவாதமாக மாற்றினர்.அதாவது அறவழி போராட்டம் என அறிவித்து விட்டு ரயில் மீது கல்லெறிந்து வன்முறையில் ஈடுபடலாமா? இது தான் அன்புமணி ராமதாஸ் கூறிய மாற்றமா? என்றெல்லாம் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில் இந்த போராட்டத்தை தமிழக ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாகவும்,பாமகவினர் செய்த ரயில் மறிப்பு போராட்டத்தை மட்டும் விவாதமாக மாற்றி பாமகவையும்,வன்னிய மக்களையும் வன்முறையாளர்களாக சித்தரிக்க முயற்சிப்பதாகவும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாற்றியுள்ளார்கள். குறிப்பாக ரயில் மறிப்பு சம்பத்தை செய்தியாக வெளியிட்டவர்கள்,அதே போராட்டத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பாமகவினர் வழி ஏற்படுத்தி கொடுத்தது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பாமகவினர் ஊடகங்கள் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னிய சமூகத்தினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று 1987 ஆம் ஆண்டில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தின் மூலமாக மேற்கொண்ட போராட்டத்தை அடக்க அதிமுக அரசு நடத்திய துப்பாக்கி சூட்டால் 21 வன்னியர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி வன்னியர்களுடன் 108 சமூகத்தினரையும் இணைத்து இட ஒதுக்கீடு வழங்கினர். அப்போதிலிருந்தே கருணாநிதி வன்னியர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக வன்னியர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் பாமகவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தொடர்ந்து வன்னியர்களின் வாக்கு வங்கியை நம்பியிருந்த திமுக கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் என்று வாக்குறுதியை அளித்தது.ஆனால் அந்த தேர்தலில் தோல்வியை தழுவியதால் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த வாக்குறுதி குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.இவ்வாறு தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வன்னியர்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருவதால் இந்த முறை எப்படியாவது வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியே ஆக வேண்டும் என்று பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலம் காலமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டு வந்த வன்னிய மக்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு அறவழி போராட்டத்தை தமிழக ஊடகங்கள் சாதிய வன்மத்துடன் வன்முறை போராட்டமாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என்று பாமக தரப்பில் விமர்சனம் எழுந்துள்ளது.மேலும் இந்த போராட்டமானது வன்முறையல்ல,எங்களின் உரிமை எனவும் பாமகவினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.