வேனின் டயர் வெடித்து விபத்து! திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பலியான பரிதாபம்!
மதுராந்தகம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த வேனின் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி 18 பேர் படுகாயம்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள படூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை வேளச்சேரியில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த கிராமத்தைச் சார்ந்த சுமார் 25 பேர் வேன் ஒன்றினை ஏற்பாடு செய்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தனர்.
இந்த வேன் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வேனில் இருந்த பின் சக்கரத்தின் டயர் வெடித்ததில் வாகனம் நிலை தடுமாறியது. வேனில் இருந்தவர்கள் அச்சத்தில் ஐயோ! அம்மா! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கூச்சலிட்டனர்.
தாறுமாறாக தறிக்கெட்டு ஓடிய வேன் சாலையின் நடுப்பகுதியில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 25 பேரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வேனில் இருந்த படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 25 பேரை மீட்டு அருகில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற சுபிதா வயது 12, கோகுல் வயது 16, அஜித்குமார் வயது 25, ஆகியோர் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் சிறுவன்,சிறுமி உட்பட 3 பேர் இறந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.