தடையை மீறி ஊர்வலமாக சென்ற விசிகவினர்! கூண்டோடு தூக்கிய காவல்துறை
மேட்டுப்பாளையத்தில் தனியார் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து பலியான 17 பேருக்கு நினைவஞ்சலி செலுத்த தடையை மீறி ஊர்வலமாக சென்ற தமிழ் புலிகள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கைது. போலீசார் அரசியல் கட்சியினர் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 2.12.2019 ஆம் தேதி பரவலாக பலத்த மழை பெய்தது மழை காரணமாக மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் தனியார் துணிக்கடை உரிமையாளரின் சுற்றுச்சுவர் இடிந்து 5 வீடுகளின் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையொட்டி மேட்டுப்பாளையத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் , விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மற்றும் டிசம்பர் 2 நினைவேந்தல் குழு திராவிடர் பண்பாட்டு கூட்டு இயக்கம் ஆகியவை சார்பில் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரியிருந்தனர்.
ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் தடையையும் மீறி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும் என்று கட்சியினர் தெரிவித்து இருந்தனர். இதனையொட்டி நடூர் ஏ.டி. காலனி மற்றும் பேருந்து நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் தமிழ் புலிகள் கட்சியினர் மாநில அமைப்பு செயலாளர் சபாபதி தலைமையில் கோஷங்களை முழங்கிக் கொண்டே தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 58 பேரை கைது செய்து போலீஸ் வாகனம் மூலம் தனியார் மண்டபம் கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் டிசம்பர் 2 நினைவேந்தல் குழு, திராவிடர் பண்பாட்டு கூட்டு இயக்கத்தினர் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் ராசு. தொல்குடி மைந்தன் மண்டல அமைப்பு செயலாளர் சுசி கலையரசன் ஆகியோர் முன்னிலையில் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து கோஷங்களை முழங்கிக் கொண்டே ஊர்வலமாக புறப்பட்டு பாரதஸ்டேட் வங்கி முன்பு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கிருந்த 66 பேரை கைது செய்து காவல்துறை வாகனம் மூலம் தனியார் மண்டபம் கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். நினைவஞ்சலி செலுத்த தடையும் மீறி ஊர்வலமாக புறப்பட்ட மொத்தம் 124 பேரை போலீசார் கைது செய்தனர்.