Velmurugan: கடலூர் மாவட்ட மக்களை திமுக வஞ்சிக்கிறது வேல்முருகன் கண்டனம்.
திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும் பண்ருட்டி தொகுதி எம் எல் ஏ-வாக இருப்பவர் வேல்முருகன். தற்போது திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். ஃபெஞ்சல் புயலால் கடலூர் மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது. பொதுமக்கள் அடிப்படை வாழ்வியல் வருமானத்தை இழந்து இருக்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் முழுகி இருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் திமுக அரசு புயல் பாதிப்பு நிவாரணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் என்பது போதுமானதாக இல்லை எனக் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். மேலும், கடலூர் மாவட்ட மக்களை திமுக அரசு வஞ்சித்து இருக்கிறது என பேசி இருக்கிறார்.
இதற்கு முன்பு சட்டமன்ற கூட்ட தொடரில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இடம் பண்ருட்டி தொகுதியில் பொதுப்பணி எதுவும் நடைபெறவில்லை அதற்கு நிதி வேண்டும் என கேட்டு இருந்தார். அதற்கு அமைச்சர் துரைமுருகன் அடுத்த நீதி ஒதுக்கீடு செய்யும் போது பார்த்துக் கொள்ளலாம் என கூறினார்.
பிறகு செய்தியாளரை சந்தித்து பேசிய அவர் சென்னையில் வெள்ள பாதிப்பு நிவாரணம் அனைத்து தரப்பு மக்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் 6 ஆயிரம் கொடுத்தார்கள். ஆனால் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு வெறும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்து இருக்கிறார்கள் என நேரடியாக திமுகவை எதிர்த்து பேசி இருக்கிறார்.
தற்போது தான் கூட்டணியில் இருந்து கொண்டே விசிக துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா திமுகவுக்கு எதிராக பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு விசிகவில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திமுகவிற்கு எதிராக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.