1.நாம் சாப்பிடும் பொழுது பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால், அதனை குளிர்விக்க கூடாது. சாப்பிட்டு முடித்த பின்னர் தான் பூஜை அறையில் உள்ள விளக்கினை குளிர்விக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடுவதற்கு முன்பாகவே விளக்கை குளிர்வித்து விட வேண்டும்.
2. இரு கைகளால் தலையை சொரிதல் கூடாது.
3. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் பொழுதும் அந்த இடத்தில் இருக்கக் கூடாது.
4. சுவாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களை சூட்டக் கூடாது.
5. நாம் நினைத்த காரியங்கள் நடக்காமல் தடை ஏற்பட்டு கொண்டே இருந்தால், ஒரு புது மஞ்சள் நிற துணியில் படிகாரம் சிறிதளவு, எலுமிச்சை, விரலி மஞ்சள், பச்சரிசி சிறிதளவு, ஒரு ரூபாய் நாணயம், வெட்டிவேர் ஆகியவற்றை வைத்து வாசலில் கட்டி விடவும். இதனால் தடைகள் நீங்கி உங்கள் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்.
6. குலதெய்வ கோவிலுக்கு பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை நாட்களில் செல்வது மிகவும் சிறப்பு.
7. குலதெய்வ கோவிலுக்கு செல்லும் முன்பு வீட்டில் பொங்கல் வைத்து வழிபட்ட பின்பு செல்ல வேண்டும். நம்மால் முடிந்த அளவிற்கு வெல்லம் வாங்கி கோவிலுக்கு தானமாக கொடுப்பது மிகவும் நல்லது. அதுவும் நமது வீட்டில் ஒரு இரவு அந்த வெல்லத்தை வாங்கி வைத்து, அடுத்த நாள் தான் அதனை கொடுக்க வேண்டும்.
8. வீட்டில் தினமும் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் நெய் இவைகளை ஒன்றாக கலக்காமல் தனித்தனியாக மூன்று விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறைந்து நிம்மதி உண்டாகும்.
9. பூஜை அறையில் மிருகங்களின் தோலினால் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
10. எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளை பூஜையறையில் பயன்படுத்தக் கூடாது.
11. நமது வீட்டில் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் பொழுது நின்று கொண்டு செய்யாமல், அமர்ந்து நமது பிரார்த்தனையை கூறும்பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
12. பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் பொழுது ஆறு வெற்றிலை, மூன்று பாக்கு மற்றும் சிறிதளவு பச்சை கற்பூரம் ஆகியவற்றை வைத்து வைக்க வேண்டும். இதனால் பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகரித்து பணவரவு ஏற்படும்.
13. மாவிலை தோரணம் கட்டுவது வீட்டில் உள்ள காற்றை சுத்தப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. வாஸ்து குறைபாட்டையும் சரி செய்கிறது.
14. மாவிலை தோரணம் கட்டும் பொழுது இலைகளின் எண்ணிக்கை ஒற்றை படையில் வருமாறு கோர்த்து கட்ட வேண்டும். இது எதிர்மறை எண்ணங்களை நீக்கி, புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
15. காலில் கருப்பு கயிறு கட்டுவதற்கு முன்பு சனிபகவானை வேண்டிக் கொண்டு, அதில் ஒன்பது முடிச்சுகளை போட்டு, ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கட்டிக் கொள்ள வேண்டும். இதனால் கண் திருஷ்டி விலகும்.