சென்னை: தல அஜித் குமாரின் 62-வது படம் விடாமுயற்சி ஆகும். இந்த படம் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஆரவ், ஆக்சன் கிங் அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் முக்கியனமான கதைகளத்தில் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடந்தது. அதுமட்டுமின்றி அஜித் குமாரின் அடுத்த படமான குட் பேட் அக்லி பொங்கலுக்கு வெளிவரும் நிலயில் இருந்தது. ஆனால் தற்போது விடாமுயற்சி வெளியாகும் என அதிகாரபூர்வமாக லைக்கா நிறுவனம் அறிவித்து இருந்தது.
மேலும் இதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. முன்னதாக விடாமுயற்சி படத்திலிருந்து அனிருத் இசையில் முதல் பாடலும் வெளியானது. இதனால் விடாமுயற்சி படம் கண்டிப்பாக வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர். இருப்பினும் விடாமுயற்சி படம் இன்னும் சென்சருக்கு அனுப்பப்படவில்லை என்ற தகவல் கடந்த ஒரு வார காலமாக கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். மேலும் படம் வெளியாக இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் இன்னும் சென்சாரருக்கு அனுப்பாதது ரிலீஸ் தேதி மாறுமா என்ற கேள்வியை எழுப்பியது.
இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த லைக்கா நிறுவனம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் அதனால் தான் பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட அவர்களால் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அடுத்ததாக மகிழ் திருமேனி படத்தை இன்னும் முடித்துக் கொடுக்கவில்லை என்றும், இது ஒரு ஆங்கில படத்தின் தழுவல், அதற்கான ரீமேக் உரிமையை வாங்குவதில் பிரச்சனை நீடிப்பதாகவும், அதனால் தான் படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என கூறப்படுகிறது. விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகாததால் வேறு சில படங்கள் பண்டிகை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.