Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தயாரிப்பாளர்களுக்கு உதவ சம்பளத்தில் 25% குறைத்த விஜய் ஆண்டனி

தயாரிப்பாளர்களுக்கு உதவ சம்பளத்தில் 25% குறைத்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகனாக உள்ள விஜய் ஆண்டனி “கொலைகாரன்” படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மூன்று படங்களில் பணியாற்றி வருகிறார்.

விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அவர் நடிப்பில் உருவான “பிச்சைக்காரன்” திரைப்படம் தொலைக்காட்சி வெளியீட்டிலும் பெரிய சாதனை படைத்தது. ஏப்ரல் 14-ம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட “திமிரு புடிச்சவன்” திரைப்படமும், பார்வையாளர்களின் எண்ணிக்கையில் “தர்பார்” மற்றும் “சீமா ராஜா” திரைப்படங்களுக்கு இனையான சாதனை படைத்தது.

விஜய் ஆண்டனி தற்போது FEFSI சிவா அவர்களின் தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும், இயக்குநர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியிடப்படும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன.

எல்லாமே திட்டப்படி சென்றுகொண்டிருந்த நேரத்தில், கொரோனா ஊர்டங்கு தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

திரையரங்குகள் செயல்பட துவங்கி புது படங்கள் வெளியாக மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலையில், தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கபடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களையும் கேட்டு கொண்டுள்ளார்.

இந்த சம்பள குறைப்பு மூலம், மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டில் கணிசமான அளவுக்கு செலவு குறைத்து, வெகு விரைவில் படங்களை எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெளியிட முடியும் என்று விஜய் ஆண்டனி நம்புகிறார்.

விஜய் ஆண்டனியின் இந்த தாராள மனதை “அக்னி சிறகுகள்” படத்தின் தயாரிப்பாளர் T. சிவா ““50 நாட்களுக்கு மேலாக இந்த கொரோனா லாக் டவுன் காரணமாக தவித்து வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இப்படி ஒரு முன்னணி நடிகர் தாமாகவே முன்வந்து தன் சம்பளத்தை குறைந்த கொண்டது அனைவரும் பாராட்ட வேண்டிய, தமிழ் சினிமாவுக்கு முன்னுதாரணமாக இருக்க போகும், ஒரு நடவடிக்கை.

அவரை போலவே அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியையே தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அனைத்து தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்.

அப்படி செய்தால் தான், தற்போது வெளியாக காத்திருக்கும் படங்களும், முடிக்கவிருக்கும் படங்களும் எந்த நிதி சிக்கலும் இல்லாமல் வெளியாகும். இப்படி ஒரு முன்னுதாரணமான செயலை செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவும் விஜய் ஆண்டனியை மனதார பாராட்டுகிறேன். அவர் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.” என விஜய் ஆண்டனியின் செயலை பாராட்டியுள்ளார்.

மீதம் இரண்டு பட தயாரிப்பாளர்களும் விஜய் ஆண்டனியின் இந்த உதவியை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டனர்.

Exit mobile version