ஆந்திராவக் காப்பாத்தியாச்சு;தமிழ்நாட்ட நீங்கதான் காப்பாத்தணும்!விஜய் ரசிகர்களின் குறும்பு!
விஜய்யை அரசியலுக்கு வர சொல்லி மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் அடித்துள்ள் போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது. இது மாஸ்டர் படப்பிடிப்புத் தளம் வரை சென்றுள்ளது. பாஜகவினர் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஆயிரக்கணக்கில் குவிந்தனர் விஜய் ரசிகர்கள். இந்த சர்ச்சைகள் இதோடு நில்லாமல் மீண்டும் விஜய்யின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு வரை சென்றுள்ளது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் சிலர் வித்தியாசமான முறையில் விஜய்க்கு அரசியல் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் அடித்துள்ள போஸ்டரில் ‘அதில் விஜய்யின் இருபுறமும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரும் ‘ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். லங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்’ என வேண்டுகோள் விடுப்பது போல அச்சடித்து ஒட்டியுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையேயான மோதல் இப்போது முடியாது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.