Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறாரா விஜய்? பின்னணி என்ன?

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றங்களை ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.

பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குனர் மற்றும் நடிகருமான SA சந்திரசேகரன் தனது 80 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதில் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொள்ளாதது சர்ச்சைகளைக் கிளப்பியது. மேலும் சமீபத்தில் திருக்கடையூர் கோயிலுக்கு சென்றும் SAC- ஷோபா தம்பதிகள் வழிபட்டனர். அந்த புகைப்படங்களும் வெளியாகி கவனத்தைப் பெற்றன.

இந்நிலையில் தற்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய SAC ”விஜய் மக்கள் இயக்கம் முன்பு போல ஆக்கப்பூர்வமாக இல்லாமல் செயலிழந்துவிட்டது. இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும் அவர் தந்தைக்கும் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் விஜய் தந்தையை சந்திப்பதை நிறுத்திவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த தகவல்கள் சமூகவலைதளத்தில் பரவி சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணிசமான அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version