தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்… தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்… 

0
124

 

தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்… தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்…

 

திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் தூண்டில் பாலம் அமைப்பதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன் என்று தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

திருச்செந்தூரில் தூண்டில் பாலம் அமைப்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் சுமார் 1,000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இப்பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால், மீன்பிடித் தொழிலுக்குச் சென்று விட்டு திரும்பும்போது கரையில் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும் தெரிகிறது. இதனால், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்துத் தர வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் மீன்வள மானிய கோரிக்கையில் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் எந்த பணிகளும் நடைபெறாததால், இப்பகுதி மீனவர்கள் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியும் தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டி வரும் தமிழக அரசையும், மீனவளத்துறை அமைச்சரையும் வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைத்து அமலி நகர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். கடல் நீரை நம்பி வாழும் மீனவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டியது அரசின் கடமை. எனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.