Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் முடிவு பண்ணிட்டார்! புட்டு புட்டு வைக்கும் பிரஷாந்த் கிஷோர் – களமாட காத்திருக்கும் தவெக!

2026 தமிழக தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனித்துப் போட்டியிடும் என உறுதியாகக் கூறியுள்ளார் தேர்தல் வியூகரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர். கடந்த சில மாதங்களாக, தவெக-அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாகவும், மறுபுறம் தவெக தனித்துப் போட்டியிடும் என்றும் இருவேறு தகவல்கள் வெளிவந்திருந்தன. இந்தப் பின்னணியில், சமீபத்தில் தவெக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரசாந்த் கிஷோர், தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார்.

தமிழக அரசியலில் தேசிய கட்சிகளுக்கான சவால்

தமிழகத்தில் தேசிய கட்சிகள் பெரிதாக வளராததற்கு முக்கியக் காரணமாக, திராவிடக் கட்சிகள் அமைத்துள்ள வலுவான அரசியல் கட்டமைப்பை பிரசாந்த் கிஷோர் குறிப்பிடுகிறார். அண்ணா காலத்திலேயே கடைசி கிராமம் வரைக்கும் திமுக தனது அடித்தளத்தை வலுப்படுத்தியது. பின்னர், கருணாநிதியின் தலைமையில் அது மேலும் வலுவானதாக மாறியது. இதேபோல், திமுகவில் 20 ஆண்டுகள் பயணித்த எம்ஜிஆர், அதிமுகவை உருவாக்கியபோது, அதுவும் ஒரே மாதிரியான வலுவான கட்டமைப்பை பெற்றது. இதனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் தமிழகத்தில் முக்கிய நிலையை பெற முடியவில்லை.

தவெக கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சி

தவெக, தனது அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்த முக்கிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த தேர்தலில் திமுகவுக்குத் தேர்தல் வேலை செய்த ஆதவ் அர்ஜுனா, தற்போது தவெகவில் இணைந்த நிலையில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் முக்கியப் பங்காற்றுகிறார். இதன் தொடர்ச்சியாகவே சமீபத்தில் கட்சிக் கட்டமைப்பை விரிவாக்கும் கூட்டம் நடத்தப்பட்டது.

தவெக தனித்துப் போட்டியிடுவது ஏன் முக்கியம்?

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரசாந்த் கிஷோர், விஜயிடம் தனித்துப் போட்டியிடுவதன் முக்கியத்துவத்தை விளக்கினார். திமுகவின் வலுவான கூட்டணிக்கு எதிராக அதிமுக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற செய்திகள் வெளியான நிலையில், பிரசாந்த் கிஷோரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

“தவெக மாற்றமாக திகழும்” – பிரசாந்த் கிஷோர்

“தமிழக மக்கள் விஜயை மாற்றத்தின் முகமாக பார்க்கிறார்கள். தவெக ஒரு மாறுபட்ட கட்சியாக தன்னை முன்வைக்க வேண்டும். அதன் தனித்துவத்தை உறுதியாக வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. ஆகையால், தவெக தனித்துப் போட்டியிடும்; தனித்துப் போட்டியிட வேண்டும்” என்று உறுதியாக தெரிவித்தார் பிரசாந்த் கிஷோர். இதனால், 2026 தேர்தலில் விஜயின் தவெக எந்தவித கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிடும் என்பது உறுதியான நிலையில் உள்ளது.

Exit mobile version