1 கோடி வாக்குகள் உங்களுக்கு வேண்டுமா? பத்திரத்தில் இதை எழுதித் தாருங்கள் விக்ரமராஜா வைத்த செக்
தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடிக்கு மேலுள்ள வணிகர்களின் வாக்குகள் வேண்டும் என்றால் எங்களுடைய கோரிக்கையை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றித் தருவோம் என்று பத்திரத்தில் எந்த முதல்வர் கையொப்பம் போடுகிறார்களோ அவர்களுக்கு இந்த ஒரு கோடி வாக்குகள் கிடைக்கும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரம ராஜா அவர்கள் இப்போது ஆட்சி செய்து வரும் எடப்பாடி அரசு பல்வேறு அமைப்புகளுக்கு நலத்திட்டங்களை செய்து வருகிறது.ஆனால் வணிகர்களுக்கு என்று எந்த ஒரு சலுகைகளும் நல்ல திட்டங்களையும் அறிவிக்கவில்லை.மற்ற எல்லோருக்கும் அள்ளித்தரும் இந்த எடப்பாடி அரசு வணிகர்களுக்கு மட்டும் கிள்ளி கூட தரவில்லை. எனவே எங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த அரசு முன் வருகிறதோ அவர்களுக்குத்தான் வணிகர்களின் ஒரு கோடி வாக்குகளும் விழும் என்று பேசியிருந்தார்.
மேலும் பெட்ரோல் டீசல் விலையை GST வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் விலை ஏற்றத்தை குறைக்க முடியும் என்றும் அவர் பேசியிருந்தார்.விக்கிரம ராஜாவின் இந்த அறிவிப்பை சிலர் நல்ல ஐடியா என்று வரவேற்றாலும், பலர் இது நடக்காத காரியம் என்றும் கூறி வருகின்றனர். வணிகர்களின் கூட்டமைப்பில் ஒரு கோடி மக்கள் இருந்தாலும்கூட எல்லோரும் விக்கிரமராஜா சொல்லும் ஒரு கட்சிக்கு ஓட்டு போட வாய்ப்பு என்பது மிக மிக குறைவு என்று கூறுகின்றனர்.
திமுக அல்லது அதிமுக கட்சியுடன் பணம் வாங்க தான் இவ்வாறு அறிவித்துயிருக்கிறார் என்று விமர்சித்து வருகிறார்கள்.மேலும் இதுவரை எந்த முதலமைச்சரும் எந்த அமைப்போடும் அல்லது எந்த மக்களுக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்டு உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று சொல்லியதில்லை. அப்படியிருக்கையில் இப்போதுள்ள முதல்வர் வேட்பாளர்கள் மட்டும் எவ்வாறு கையொப்பம் இடுவார்கள் என்று வணிக கூட்டமைப்பிலுள்ள வணிகர்களே கேள்வி எழுப்பி வருகிறார்கள்.