ஆன்லைன் கரன்சி ஆபத்தானது! ஆன்லைன் வணிகத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் – விக்ரமராஜா வலியுறுத்தல்

0
128
AM Vikrama Raja

ஆன்லைன் கரன்சி ஆபத்தானது! ஆன்லைன் வணிகத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் – விக்ரமராஜா வலியுறுத்தல்

ஆன்லைன் கரன்சி ஆபத்தானது எனவும் அன்னிய நாடுகளின் ஆன்லைன் வணிகத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா வலியுறுத்தியுள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்கள் காலாவதியான பொருட்களை தேதியை மாற்றி மீண்டும் சந்தைப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வணிகர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து தீர்வுகளை எடுத்துரைத்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை திரும்ப பெற வலியுறுத்தியும், வணிகவரித்துறை அதிகாரிகள் அத்துமீறலை கண்டித்தும் கடந்த வாரம் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரிகளிடம் கொடுத்துள்ளதாகவும், அமைச்சரை சந்தித்து தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குளறுபடுகள் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் இருந்து வருகிறது என்றார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நாளொரு சட்டத்தை இயற்றி சாமானிய வணிகர்களை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகோர்க்கும் சூழலை உருவாக்கவதாக வணிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள மாநில பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை, நிதித்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், டிசம்பர் 27, 28தேதிகளில் டெல்லிக்கு சென்று ஜிஎஸ்டி குளறுபடியை சரிசெய்யுமாறு முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் சாமானிய உற்பத்தியாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே தொழில் செய்யும் நிலையை இது உருவாக்கும் என்றும், இதன் காரணமாக விலைவாசி மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விவசாயிகள் கொண்டு வரக்கூடிய பொருட்களுக்கு வணிகவரித்துறை அதிகாரிகள் வரிவிதிக்க கூடாது எனவும் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுவது தங்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் உயரதிகாரகளிடம் முறையிட்டு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

ஆன்லைன் கரன்சி என்பது ஆபத்தானது எனவும் அது கார்ப்பரேட் கம்பெனிக்கானது, சாதாரண மக்களுக்கானது அல்ல என்றார். சிறு வணிகர்களை சோதனை செய்யும் அதிகாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் சோதனை செய்யாமல் கார்பரேட் நிறுவனங்களை பாதுகாத்து வருவதாக குற்றம் சாட்டினார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் காலாவதியான பொருட்களை தேதியை மாற்றி மீண்டும் சந்தைப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் மோசடிகளை அதிகாரிகள் பாதுகாத்து வருவதாக சாடினார். அன்னிய நாட்டு நிறுவனங்களின் ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும் எனவும் விக்கிரமராஜா அப்போது கேட்டுக் கொண்டார்.