விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! எங்களுக்கு இந்த சின்னம் போதும்! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு!
தமிழகமே திரும்பி பார்த்துக் கொண்டிருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான புகழேந்தி அவர்கள் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் திமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, நாம் கமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா அவர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்நிலையில் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் குறித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.
கடந்த 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் முயற்சி செய்த நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் அளிக்கப்பட்டது.
தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் ஒலிவாங்கி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் நாம் தமிழர் கட்சி இந்த புதிய சின்னத்தை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விரைவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தனர்.
இதையடுத்து நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றதால் நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சி விரும்பும் சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து கேட்டு வாங்க முடியும். இருப்பினும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நாங்கள் மைக் சின்னத்தில் தான் போட்டியிடப் போகிறோம் என்று தற்பொழுது அறிவித்துள்ளார்.