கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த மாணவி திலகவதி (18), இவர் அங்குள்ள கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பேராவூரணி காலனி பகுதியை சேர்ந்த தலித் சமுதாய இளைஞன் ஆகாஷ், மாணவி திலகவதியை ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
தினந்தோறும் மாணவி திலகவதி கல்லூரிக்கு செல்லும் போது ஆகாஷ் அவரை பின்தொடர்ந்து சென்றதாகவும், ஒரு கட்டத்தில் அவரின் இந்த செயலை திலகவதி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
மாணவியின் கண்டிப்பை மீறி மீண்டும் அவரை பின்தொடர்ந்த ஆகாஷ் தன்னுடைய காதலை மாணவியிடம் வெளிப்படுத்தியுள்ளார். அவரது காதலை ஏற்றுக் கொள்ளாத திலகவதி இளைஞர் ஆகாஷை எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் மாணவி திலகவதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு அவரது வீட்டிற்கு சென்ற ஆகாஷ் தன்னுடைய காதலை ஏற்க முடியுமா ஏற்க முடியாதா? என்று கேட்டுள்ளார். அவரது காதலை மாணவி திலகவதி ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திலகவதியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார்.
பலத்தகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த திலகவதியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பத்திலிருத்தோர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். திலகவதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதனையடுத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஆகாஷை கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்த நேற்றோடு(08/05/2020) ஓராண்டு நிறைவுற்றது, இந்த நாளில் பலர் தங்களது வீட்டில் இறங்கலை பதிவு செய்தனர்.
மாணவி திலகவதி கொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவுற்ற நிலையில், இதுவரை சம்பந்தப்பட்ட கொலையாளிக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடுமையான சட்டங்களை இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி #ViolenceAgainstTNWomen என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.