ஒமைக்ரானை விட வேகமாக பரவும் வைரஸ்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!
சீனாவில் முதன்முதலாக பரவத் தொடங்கி அதன் பிறகு உலகின் பல நாடுகளிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்து கொண்டிருந்த நிலையில், அதன் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்த இந்த ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் ஏராளமான நாடுகளுக்கு பரவியது. இருப்பினும் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பை போன்று, இதனால் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த ஒமைக்ரான் வருகைக்கு பிறகு உலகின் பல நாடுகளிலும் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிலும் இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவியது. அதன் பிறகு அங்கு கொரோனா பரவலின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அதன்பின் சில வாரங்களில் ஒமைக்ரானின் புதிய உருபான பிஏ.2 சில நாடுகளில் பரவி இருந்தது காணப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவிலும் இந்த பிஏ.2 வைரஸின் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் கூறுகையில், ஒமைக்ரான் வைரஸின் புதிய உருமாறிய வைரஸான பிஏ.2 வைரஸால் அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். புதிதாக பாதிக்கப்படுபவர்களில் 30 சதவீதம் பேர் இந்த பிஏ.2 வைரஸால் பாதிக்கப்படுவர். இது ஒமைக்ரானை விட 60 சதவீதம் அதிக பரவும் தன்மை கொண்டது என தெரிவித்திருக்கிறார்.