டுவிட்டரில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதி!! எலான் மஸ்க் அறிவிப்பு!!
சமூக வலைதளமான டுவிட்டரில் விரைவில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த வசதி கூடிய விரைவில் வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.
சமூக வலைதளமான டுவிட்டரை எலான் மஸ்க் அவர்கள் வாங்கிய பிறகு பல்வேறு வகையான புதிய மாற்றங்களை அறிவித்து வருகிறார். டுவிட்டரில் ஒரிஜினல் கணக்குகளுக்கு வழங்கப்படும் புளூ டிக் சின்னத்திற்கு மாதச் சந்தா தற்போது வசூலிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு மாதச் சந்தா வழங்காத கணக்குகளில் இருந்து புளு டிக் சின்னத்தை டுவிட்டர் நீக்கியது. அதுமட்டுமில்லாமல் நாம் செய்யும் டுவீட்டுகளுக்கு பணம் பெறும் வசதியையும் டுவிட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. இதையடுத்து தற்போது டுவிட்டரில் வாய்ஸ் கால் வசதி மற்றும் வீடியோ கால் வசதி செயல்படுத்தப்படவுள்ளது.
டுவிட்டரில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதி கொண்டு வருவது மூலமாக அனைவரும் மொபைல் நம்பரை கொடுக்காமல் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் செய்து கொள்ளலாம். இதன் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடன் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்து பேசிக் கொள்ளலாம்.
மொபைல் நம்பர் இல்லாமல் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் இந்த வசதி ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.