தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்! அதிமுக வைத்த அந்த கோரிக்கை!

0
122

இந்திய தேர்தல் ஆணையம் வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது, இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் ஆலோசனை செய்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பாக ஆர் எஸ் பாரதி, வழக்கறிஞர் கிரிராஜன், அதிமுக சார்பாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் சார்பாக நிர்வாகிகள் தாமோதரன், நவாஸ் கான், பாஜக சார்பாக கரூ நாகராஜன், கராத்தே தியாகராஜன், தேமுதிக சார்பாக பார்த்தசாரதி, பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வீரபாண்டியன், ஏழுமலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பத்ரி ராஜசேகரன், பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக பாரதிதாசன், அடைக்கலராஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.

இந்த கூட்டத்தில் பங்குபெற்ற நிர்வாகிகள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து சிறப்பு முகாம்களை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கட்சியின் பிரதிநிதிகள் நிருபர்களிடம் தெரிவித்தார்கள்.

அதாவது அதிமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்ததாவது, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு நடைபெற இருக்கக்கூடிய தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் எந்த தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு அவர்களின் பெயர் சேர்க்கப்படும் என்ற விவரத்தை கூற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். அதேபோல புதிய முகவரிக்கு மாறி இருப்பவர்கள் உடைய பெயர்களை அவர்கள் வசித்து வரும் பகுதிகளில் வாக்களிக்க வசதியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும், தெரிவித்து உள்ளோம் என அதிமுக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

அதே போல பாஜக சார்பாக கரூ நாகராஜன் முன் வைத்த கோரிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு புதிதாக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் அளிக்கப்பட இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு தேர்தல் ஆணையம் எந்த முறையான பதிலும் கூறவில்லை என்று சொல்லப்படுகிறது, ஒரு சில பகுதிகளில் மொத்தமாக வாக்காளர்களை சேர்ப்பது, நீக்குவது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதனை மற்றொரு அதிகாரியின் மூலமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று பாஜக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை சார்ந்த தாமோதரன் தெரிவித்ததாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கும் விதத்தில் கல்லூரிகளிலேயே முகாம் நடத்தப்பட வேண்டும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தெரிவித்திருக்கிறார்.

தேமுதிக சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு நான்கு நாட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்களை 6 முதல் 8 நாட்களாக உயர்த்த வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறோம். அதேபோல நோய்த்தொற்றின் போது இருந்தது போல வாக்குச்சாவடி மையங்கள் அதிகப்படுத்த வேண்டும் எனவும், அந்த எண்ணிக்கையை குறைக்க கூடாது எனவும், தேமுதிக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது என்று அந்தக் கட்சியை சார்ந்த பார்த்தசாரதி கூறியிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பத்ரி தெரிவித்ததாவது சிறப்பு முகாம்களை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் எந்தவிதமான குறைபாடும் இல்லாத விதத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். அதேபோல ஒவ்வொரு கட்சியினரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அரசியல் கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.