அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவா? வக்ஃபு வாரியம் அதிரடி அறிவிப்பு
அயோத்தி வழக்கில் இன்று காலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில்,’சர்ச்சைக்குரிய அயோத்தியின் இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அந்த இடத்தில் இந்துக்கள் கோவில் கட்டலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை இந்துக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும் உபி அரசும் தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததால் இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் இந்த தீர்ப்பை வரவேற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இந்த நிலையில் தீர்ப்புக்கு பின்னர் இந்த வழக்கில் சன்னி வக்ஃப் வாரியத்திற்காக வாதாடிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலா அவர்கள் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தபோது, ‘சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தாங்கள் மதிக்கிறோம் என்றும், ஆனால் இந்த தீர்ப்பால் நாங்கள் திருப்தி அடையவில்லை என்றும் தீர்ப்பு குறித்து உரிய ஆலோசனைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்த தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதக்கூடாது என்றும், தீர்ப்பின் முழு விபரத்தை படித்தபின் சீராய்வு மனு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் சற்றுமுன் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என சன்னி வக்ஃபு வாரியம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி பிரச்சனை முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது