Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிப்பு..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! என்ன காரணம்..?

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆனைகுன்றம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர், அங்கு கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 2001ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனால், கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டுமென முனுசாமியின் மகன் ராஜகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும், அதுவும் 3 மாதங்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு வேலை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், ராஜகிரி கடந்த 2024ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டும், தனக்கு வேலை வழங்கவில்லை என குறிப்பிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகுமாறு சட்டப்பூர்வ நோட்டீஸ் பிறப்பித்தார். இந்நிலையில் தான், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும், இந்த வழக்கில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்சியருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version