ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிவு! 16 ஆயிரம் கன அடியாக குறைவு!
கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த 2 அணைகளிலிருந்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் ஒகேனக்கலின் நேற்றைய நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று நீர்வரத்தானது வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்த நிலையில் மெயின்அருவி குளிக்கும் இடம் சேதமானதால் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி போன்ற அருவிகளில் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளது.
குளிப்பதற்கு தடை விதித்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை கண்டு களித்தனர். காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.