வீட்டில் மட்டுமல்ல நடுவானிலும் கூட நாங்க இப்படிதான்!! கணவன் மனைவியின் செயலால் நேர்ந்த விபரீதம்!!
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் கணவன் மனைவியின் செயலால் விமானி அவசரமாக விமானத்தை டெல்லியில் தரையிறக்கியுள்ளார்.
சமீப காலங்களில் விமானங்களில் நடைபெறும் செயல்கள் சில அருவருப்பை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ந்தேறி முகம் சுளிக்க வைக்கிறது. ஏற்கனவே விமானத்தில் மது அருந்திவிட்டு சகபயணி மீது சிறுநீர் கழித்த தொழிலதிபர், விமான அவசரக் கதவை பாத்ரூம் என நினைத்து திறந்த இளைஞர், விமானி அறைக்குள் நுழைந்த போதை ஆசாமி, என பல பயங்கரமான சம்பவங்கள் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன.
இந்த சம்பவங்கள் பெரும் விஸ்வரூபமாகி அமைதியான நிலையில் தற்போது அதை மிஞ்சும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை கேள்விப்படும் பொழுது விமான பயணத்தையே சிலர் தவிர்க்கும் நிலைக்கு சென்று விடக்கூடிய நிலை இனிமேல் நிகழும் காலம் வெகு தொலைவில் இல்லை.
பொதுவாக கணவன் மனைவி என்றாலே எலியும், பூனையுமாகத்தான் வீட்டில் இருப்பர். வீடு மட்டுமல்ல வெளியிலும் சில நேரங்களில் வாக்குவாதங்கள், தகராறுகள் ஏற்படுவது உண்டு. அங்கு இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் யாரேனும் தலையிட்டு சமாதானம் செய்து பிரச்சினையை முடித்து வைப்பர்.
ஆனால் நடுவானில் கணவன் மனைவி சண்டையிட்டதால் சமாளிக்க முடியாத விமானி அவசர அவசரமாக ஏதேனும் ஒரு விமான நிலையத்தில் விமானத்தைஇறக்கினால் போதும் என நினைத்து தரையிறக்கியுள்ளார். பெரும்பாலும் விமானம் தரையிறக்கப்படுவது என்பது ஏதேனும் பயணிகளுக்கு உடல் நல கோளாறு, விமான இயந்திர கோளாறு, வானிலை மாற்றம், தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற ஆபத்தான சமயங்களில் அவசரமாக முடிவெடுத்து விமானி செயல்படுத்துவார். ஆனால் இங்கு நடந்த ஒரு சம்பவத்தால் அவர் ஏன் அந்த முடிவை எடுத்தார் என அவர் பக்கம் நியாயம் புலப்படுகிறது.
ஜெர்மனி நாட்டின் முனிச் விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்தின் தலைநகர் பாங்காங் நகருக்கு லுப்தான்சா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் திடீரென ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இருவரும் விமானத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதோடு மட்டுமில்லாமல் கட்டி புரண்டு சண்டையிட்டுள்ளனர். இதில் அடுத்த கட்டமாக கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி ஒருவர் மீது ஒருவர் வீசியதில் அருகில் உள்ள பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் சண்டை முற்றவே விமானத்தின் கதவுகளில் ஏதேனும் விரிசல் விழுந்தால் விபத்துக்குள்ளாகும் என பயந்து விமானியிடம் விமானத்தை நிறுத்துமாறு விமான குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அந்த சூழ்நிலையில் அந்த விமானம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பறந்து கொண்டிருந்தது. எனவே விமானி பாகிஸ்தானின் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி வேண்டியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் அனுமதி மறுக்கவே, விமானி டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் அனுமதியை கேட்டுள்ளார். இங்கு அனுமதி கிடைக்கவே வழங்கப்படவே அந்த ஜெர்மனி விமானம் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அதன் பின்னர் கைகலப்பில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசாரிடம் விமான குழுவினர் ஒப்படைத்தனர். ஒரு சாதாரண கணவன் -மனைவி சண்டையால் விமானமே அவசரமாக தரையிறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் கணவன் -மனைவி சண்டைக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை.ஆனால் அவர்கள் சண்டையிட்டதால் பயணிகளின் நலன் கருதி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என தெரிவித்தார்.