மீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!!
தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததை எதிர்த்து மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 150 மாணவர்கள் மற்றும் மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இங்கு ஜெயந்தி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தற்போது இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவர்கள் தனது பெற்றோருடன் அந்த தொகுதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தலைமை ஆசிரியரின் இடமாற்றத்தை ரத்து செய்ய கோரி கடந்த திங்கள் கிழமை அன்று மனு கொடுத்துள்ளனர்.
வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 1 லிருந்து தள்ளி போன நிலையில் இன்று தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் பள்ளி வாசலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் பெற்றோர்களும் கைகளில் பதாகைகள் ஏந்தியும், கூக்குரலிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சங்கர் மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
இதனால் பெற்றோர்கள் கூறியதாவது, தலைமை ஆசிரியர் ஜெயந்தி-யின் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் பள்ளிக்கு வர வேண்டும் அவர் பள்ளிக்கு வந்தாலே எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் இல்லை என்றால் எங்கள் பிள்ளைகளுக்கு டிசி வாங்கிக்கொண்டு வேறு பள்ளியில் சேர்த்து விடுவோம் என்று கூறி வருகின்றனர்.