தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு நடைமுறை!
தலைநகர் டெல்லியில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனை தடுக்க முடியாமல் மாநில அரசும், நடுவண் அரசும் திணறி வருகின்றன. ஏற்கனவை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூடுதலாக பல்வேறு கட்டுப்பாடுகளை ஏப்ரல் 30ம் தேதி வரை விதித்து மாநில அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள் உள்ளிட்ட இடங்கள் முழுவதும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திரையரங்குகள் 30% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரே ஒரு வாரச் சந்தை மட்டும் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை கடைகளும், பாதுகாப்பு விதிமுறைகளை சந்தைக்கு வருவோரும் கடைபிடிக்க வேண்டும்
அதே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும். இதனை, நலவாழ்வுத்துறை மற்றும் காவல்துறையினர் முழு வீச்சில் கண்காணிப்பார்கள்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 10 மணியில் இருந்து, திங்கட்கிழமை காலை 5 மணி வரை, அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு அதிகாரிகள், நலவாழ்வுத்துறையினர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய அடையாள அட்டைகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவோர் மீது பேரிடர் மேலான்மை விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி அரசு எச்சரித்துள்ளது.