அண்மையில் தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த 2ஆம் தேதி வெளியானது. அதன்படி தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. தமிழகத்தின் முதலமைச்சராக அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்று இருக்கிறது. அந்த கட்சியின் சார்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல தமிழகத்தின் சபாநாயகராக திமுகவின் சட்டசபை உறுப்பினர் அப்பாவு தேர்வாகி இருக்கிறார், துணை சபாநாயகராக பிச்சாண்டி தேர்வு ஆகியிருக்கிறார்.
இவ்வாறான சூழ்நிலையில் இந்த தேர்தலில் 294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதேபோல பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களில் மட்டும் வெற்றி அடைந்தது. இவ்வாறான சூழ்நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பாக போட்டியிட்டு ஜெகநாத் சர்க்கார் மற்றும் நிசித் பிரமானிக் உள்ளிட்டோர் வெற்றி அடைந்தார்கள்.
இந்த நிலையில் தேர்தலில் வெற்றி அடைந்து இரண்டு வாரங்கள் கூட சரியாக ஆகாத ஒரு சூழ்நிலையில், அவர்கள் இருவரும் தங்களுடைய சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். மேற்கு வங்காள சட்டப்பேரவை சபாநாயகர் பீமன் பாரதியிடம் தங்களுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார்கள் இதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஜெகன்நாத் சர்க்கார் மற்றும் நிசிக்பிரமானிக் தெரிவித்ததாவது, நாங்கள் கட்சி முடிவு என்னவோ அதனை பின் தொடர்கிறோம். எங்களுடைய சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய கட்சி முடிவு செய்தது அதனால் தான் செய்கிறோம் என்று தெரிவித்தார்கள். அவர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதால் சட்டசபை உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளில் ஏதாவது ஒரு பதவியை மட்டுமே தக்க வைக்க இயலும் என்ற காரணத்தால், அவர்கள் சட்டசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சி உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது.
எம்எல்ஏ பதவியை தூக்கி எறிந்த பாஜக பிரபலங்கள்!
