சமீப காலங்களில் பிட்காயினின் மதிப்பு அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், ஒரு இங்கிலாந்து பெண் தன்னுடைய முன்னாள் காதலனின் ரூ. 5900 கோடி பிட்காயினைத் தவறுதலாகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார் என்பது அனைவரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.
இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தைச் சேர்ந்த பெண்தான் ஹல்பினா எட்டி-இவான்ஸ். இவருடைய முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹோவல்ஸ். 2009-ஆம் ஆண்டு ஹோவல்ஸ் 8000 பிட்காயின்களை வாங்கி இருக்கிறார். தற்போது அதனுடைய மதிப்பு 569 மில்லியன் பவுண்ட். இந்திய மதிப்பில் பார்க்கும்போது சுமார் ரூ. 5900 கோடி. ஹோவல்ஸ் தான் பிட்காயின் வாங்கியதையே மறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீடுகளைச் சுத்தப்படுத்தும் போது பிட்காயின் மற்றும் அதன் டிஜிட்டல் கீ விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிரைவை அவருடைய முன்னாள் காதலி பார்த்துவிட்டு என்னவென்று தெரியாததால் அதைத் தவறுதலாகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்.
தற்போது பிட்காயின் விலை அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தான் பிட்காயின் வாங்கியது குறித்து அப்போதுதான் நினைவிற்கு வந்துள்ளது. அதை கேட்கப் போகும்போதுதான் அந்த பிட்காயினின் தகவல் தொகுப்புகள் அடங்கிய ஹார்ட் டிரைவானது நியூபோர்ட் குப்பைக் கிடங்கில் ஒரு லட்சம் டன் கழிவுகளுக்குக் கீழ் புதைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஹோவல்ஸ் கூறும்போது, “குப்பைக் கிடங்கில் தனது ஹார்ட் டிரைவை எடுப்பதற்கு அதிகாரிகள் மறுக்கின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். நிச்சயம் அது எனக்குத் திரும்பக் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
இதைப் பற்றி நியூபோர்ட் சிட்டி கவுன்சில் செய்தியாளர் கூறும்போது, “குப்பைகளைத் தோண்டி ஹார்ட் டிரைவைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அப்படிச் செய்யும் பட்சத்தில், சுற்றுச்சூழலில் பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும்” என்று கூறியுள்ளார். மேலும், தனது போராட்டத்தின் மூலம் ஹார்ட் டிரைவ் திரும்பக் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், அவர் தன் ஹார்ட் டிரைவ் கிடைத்தவுடன் நியூபோர்ட் நகர மேம்பாட்டிற்கு 10% தொகையைத் தானமாக அளிக்கப் போவதாக உறுதி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.