Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மஹாபாரத போருக்கு பிறகு பாண்டவர்களுக்கு என்ன ஆனது? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்!

மஹாபாரத இதிகாசத்தில் பாரத போரில் முடிவுகள் என்னவென்று நாம் அனைவரும் அறிந்ததே. போரின் முடிவில் கௌரவர்கள் அனைவரையும் கொன்று பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றுகிறார்கள்.

போரில் தனது 100 மகன்களை கொன்றதால் யது குலமான சந்திர வம்சமே அழிந்து போகும் என்று காந்தாரி சாபம் அளிக்கிறாள். இந்த சாபத்தை தடுக்க முடியாத ஸ்ரீகிருஷ்ணர் அபிமன்யுவின் மகன் பரிஷ்த்தை மட்டும் காப்பாற்றுகிறார்.

காந்தாரியின் சாபத்தால் தனக்கும் அழிவு நெருங்கிவிட்டது என்று உணர்ந்த கிருஷ்ணர் காட்டில் வேடன் விட்ட அம்பு துளைத்து இறக்கிறார். ஸ்ரீகிருஷ்ணரின் மறைவிற்குப் பிறகு தங்களுடைய வாழ்வு நிலையற்றது என்று உணர்ந்தான் தர்மன்.

இதனால் தன்னுடைய சகோதரர்கள் மற்றும் திரௌபதி அழைத்து ஆலோசித்து அரச வாழ்க்கையைத் துறக்கலாம் என்று முடிவு கூறுகிறார். தர்மனின் இந்த முடிவிற்கு நான்கு சகோதரர்களும் திரௌபதியும் சம்மதிக்கின்றனர்.

இதனையடுத்து அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீக்ஷித்தை அரசனாக முடி சூட்டுகின்றனர். பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை அழைத்துக் கொண்டு மேரு மலையை நோக்கி யாத்திரை செல்கின்றனர்.

மேரு மலையை நோக்கி பயணம் செய்து அதனை கடந்தால் பூத உடலுடன் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்பது ஐதீகம். அவ்வாறு பயணம் செய்யும் போது திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கி செல்ல வேண்டியது கட்டாயமாகும்.

இந்த பயணத்தின்போது பஞ்ச பாண்டவர்களும் திரௌபதியும் துறவிகள் போல உடையணிந்து யாத்திரை செல்கின்றனர். இவர்களுடன் தர்மன் வளர்த்து வந்த ஒரு நாயும் பின்னாலேயே செல்கின்றது.

பல நாட்கள் பயணித்து மேரு மலையின் மீது ஏறிக்கொண்டு இருக்கும் போது திரௌபதி முதலில் மயங்கி விழுந்து இறக்கிறாள். இதை பார்த்த பீமன் திரௌபதிக்கு என்ன ஆயிற்று என்று தர்மனிடம் கேள்வி எழுப்புகிறான்.

அதற்கு திரும்பிப் பார்க்காமல் தர்மன் கூறியதாவது திரௌபதி பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவி தான், ஆனால் அந்த ஐவரில் அர்ஜுனன் மீது மட்டும் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால். இதனால் திரௌபதி இந்த யாத்திரையை முடிக்க முடியாமல் இறந்துவிட்டாள் என்று கூறி நடக்கிறார்.

அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் சகாதேவன் மயங்கி விழுந்து இறக்கிறான். இதை பார்த்த பீமன் மீண்டும் தர்மனிடம் சகாதேவனுக்கு என்னாயிற்று என்று கேட்கிறான்.

அதற்கு முன்னேறி நடந்தவாறே தர்மன் கூறியதாவது சகாதேவன் தன்னைவிட அர்த்தசாஸ்திரத்தில் சிறந்தவர் யாருமில்லை என்று கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வத்தின் காரணமாக சகாதேவன் இறந்துபோனான் என்று கூறி நடக்கிறார்.

அங்கிருந்து சிறிது தூரம் கடந்த பிறகு நகுலன் மயங்கி விழுந்து இறக்கிறான். இதை பார்த்த பீமன் தன் தமையனிடம் நகுலனுக்கு என்ன ஆயிற்று என்று வினவினான்.

அதற்கு சற்றும் திரும்பி பார்க்காத தர்மன் கூறியதாவது நகுலன் தன்னைவிட அழகானவர் யாரும் இல்லை என்று கர்வம் கொண்டிருந்தான். அதன் காரணமாக அவன் இறந்துபோனான் என்று கூறுக்கொண்டே நடக்கிறான்.

அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் அர்ஜுனனும் மயங்கி விழுந்து இறக்கிறான். இதனைப் பார்த்த பீமன் அர்ஜுனனுக்கு என்ன ஆயிற்று என்று தர்மனிடம் கேட்டான்.

அதற்கு முன்னோக்கிய தன்னுடைய பார்வையை திருப்பாமல் தர்மன் கூறியதாவது அர்ஜுனன் தனுற் வித்தையில் தன்னை விட சிறந்தவன் இந்த உலகில் யாருமில்லை என்று கர்வம் கொண்டிருந்தான். அதனால் அவன் இறந்துபோனான் என்று கூறி முன்னோக்கி நடக்கிறான் தர்மன்.

அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் பீமனுக்கு தலை சுற்றி மயக்கம் வருகிறது. தனக்கும் மரணம் வந்துவிட்டது என்று உணர்ந்த பீமன் தனக்கு என்ன ஆயிற்று என்று தர்மனிடம் விளக்கம் கேட்கிறான்.

அதற்கு தன்னுடைய பார்வையை திருப்பாத தர்மன் கூறியதாவது இந்த உலகிலேயே சிறந்த பலசாலி நீ தான் என்று கர்வம் கொண்டிருந்தாய், அதனால் நீ இறக்க போகிறாய் என்று தர்மன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் விழுந்து இறக்கிறான்.

பயணம் முழுவதும் மேருமலையை கடக்க வேண்டும் என்று தன்னுடைய பார்வையை திருப்பாமல் உச்சியை நோக்கி செல்கிறான் தர்மன். தர்மனும் அவன் பின்னால் வந்த நாயும் மேரு மலையை கடந்து முடிக்கும் போது அவர்களை வரவேற்க இந்திரனே அங்கு வருகிறான்.

தர்மனை வரவேற்ற இந்திரன் அவனை தன்னுடைய புஷ்பக விமானத்தில் ஏறும் படி கூறுகிறான். ஆனால் உடன் வந்த நாயை அழைத்து செல்ல மாட்டேன் என்று கூறி அனுமதி மறுக்கிறான்.

இதனைக் கேட்ட தர்மன் தன்னை நம்பி இவ்வளவு தூரம் பின்னால் வந்த நாயை ஏற்றவில்லை என்பதால் தானும் சொர்க்கத்துக்கு வரவில்லை என்கிறான். இந்த வாய்ப்பை நிராகரித்ததால் தர்மன் மனித உடலுடன் சொர்க்கத்திற்கு செல்லும் வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்று இந்திரன் கூறுகிறான்.

தர்மன் சற்றும் தாமதிக்காமல் நாய்க்கு அனுமதி மறுக்கப்படுவதால் தானும் வரவில்லை என்று தீர்க்கமாக கூறுகிறான். இந்த உரையாடல் முழுவதையும் கேட்ட நாய் எமதர்மனாக ஆக மாறி தர்மன் முன்பு காட்சியளிக்கிறது.

எமதர்மனை வணங்கி நிற்கிறான் தர்மன், உன்னை நம்பி வந்தவர்களுக்காக எதையும் செய்யும் நீ சொர்க்கத்திற்கு தகுதி உடையவன் என்கிறார். மேலும் தர்மனை சோதிக்கவே இவ்வாறு செய்ததாக இந்திரனும் கூறி அவனை தன்னுடைய புஷ்பக விமானத்தில் சொர்க்கத்திற்கு அழைத்து சென்றனர்.

Exit mobile version