“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பதே கர்மாவிற்கான விளக்கமாக அவ்வையார் கூறியுள்ளார். சிலப்பதிகாரத்திலும் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’என்று நாம் செய்த தவறு நம்மிடமே இறுதியில் வந்து நிற்கும் என்று விளக்கியுள்ளது. அதாவது கர்மா என்பது பல கோடி முந்தைய பிறவிகளில் ஆற்றிய பாவங்களாக இருந்தாலும் அவை அனைத்தும் நம்மிடமே வந்து சேரும் என்பது ஆகும்.
கர்மாக்களிலும் பல வகைகள் உள்ளன. அவை
1. சஞ்சித கர்மா: பல கோடி பிறவிகளிலும் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளை குறிப்பதுதான் சஞ்சித கர்மா.
2. பிராரப்த கர்மா: நாம் பல கோடி பிறவிகளில் சேர்த்து வைத்த நல்வினை மற்றும் தீவினைகளுள் எவை எவை நாம் அனுபவிக்க வேண்டும் என்று இந்த பிறவியில் நம்மிடம் வந்து சேர்கிறதோ அதுதான் பிராரப்த கர்மா. அதாவது தற்போதைய பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து காரியங்களும் இதில் அடங்கும்.
3. ஆகாமிய கர்மா: இப்போது அதாவது தற்போதைய பிறவியில் நாம் செய்து கொண்டிருக்கும் நல்வினை மற்றும் தீவினைகள் அனைத்தும் ஆகாமிய கர்மாவில் சேரும்.
‘கர்மா’ என்பது நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ அது அப்படியே நம்மிடம் திரும்ப வந்து சேர்வது தான். அதாவது நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லதே நடக்கும், கெட்டது செய்தால் நமக்கும் கெட்டதே நடக்கும். தற்போதைய வாழ்க்கையில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சந்தோஷம் மற்றும் கவலை ஆகிய அனைத்திற்கும் காரணம் இந்த கர்மா தான்.
அனைத்து பிறவிகளிலும் நாம் செய்த தவறுகளை திருத்திக் கொள்வதற்காக எடுக்கின்ற பிறவி தான் மனிதப் பிறவி. அதாவது நாம் சேர்த்து வைத்த அனைத்து கர்மாக்களையும் தீர்ப்பதற்கான பிறவி தான் இந்த மனித பிறவி. எனவே இந்த பிறவியில் நாம் நினைத்தால் நாம் சேர்த்து வைத்த கர்மாக்களை குறைத்திட முடியும். எவ்வாறு நமது கர்மாக்களை தீர்ப்பது என்பது குறித்து பார்ப்போம்.
கடவுளை நமக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் சென்று வணங்காமல் அவரை மட்டுமே முழுமையாக நம்ப வேண்டும். அதாவது நமக்கு நடக்கின்ற நல்லதும் கடவுளாலே கெட்டதும் கடவுளாலே என்று நம்ப வேண்டும். கடவுளை முழுமையாக நம்புவதே நமது கர்மாக்களை குறைப்பதற்கான முதல் வழி ஆகும்.
நமது கர்ம வினைகளை குறைக்கக்கூடிய மிகப்பெரிய சக்தி, நாம் மற்றவர்களுக்கு வழங்கக்கூடிய அன்னதானத்தில் தான் உள்ளது. 70% முதல் 80% வரை நமது கர்மாக்களை குறைத்து புண்ணியத்தை தரக்கூடிய ஒரே வழி அன்னதானம் மட்டுமே.
அன்னதானம் என்பதில் பறவைகளுக்கு தண்ணீர் வைத்தல், தானியம் வைத்தல், நாய்களுக்கு உணவளித்தல், குளங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள உயிரினங்களுக்கு உணவளித்தல், குதிரை, குரங்குகள் போன்றவற்றிற்கு உணவளித்தல், குறிப்பாக பசுக்களுக்கு நாம் கொடுக்கக்கூடிய தீவனம் இது எல்லாமே நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தை பெற்று தரும்.
செடிகளுக்கு தண்ணீர் விடுவது கூட நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தை தரும் என்றும் கூறுகின்றனர். தாய் தந்தையர்களுக்கு பராமரிப்பு செய்வது, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது, ஆதரவற்றோர்களுக்கு உணவளிப்பது, சகோதர சகோதரிகளின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களது துன்பத்தை பகிர்ந்து கொள்வது போன்றவையும் புண்ணியத்தை தேடி தரும்.
ஒருவேளை உணவிற்காக போராடுபவருக்கு உணவளிப்பது, கணவன் மனைவி பிரிந்து இருந்தால் அவர்களை பேசி புரிய வைத்து ஒன்று சேர வைக்க வாய்ப்பு கிடைத்தால் அதனை செய்வதும் புண்ணியத்தை தேடி தரும். அனாதை இல்லம் முதியோர் இல்லம் போன்றவற்றிற்கு உணவளிப்பது, நோயுற்று அதனை சரி செய்ய இயலாமல் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கு உதவுவது, கோவில்களில் நடக்கக்கூடிய திருப்பணிகளுக்கு உதவி செய்வது போன்றவைகளும் நமது கர்மாக்களை தீர்த்து புண்ணியத்தை தேடித் தரும்.