Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் தேவையில்லாதது அறநிலையத்துறை தான்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி!

#image_title

தமிழகத்தில் தேவையில்லாதது அறநிலையத்துறை தான்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி!
தமிழ்நாட்டில் தற்போது உள்ள துறைகளில் தேவையே இல்லாமல் இருக்கும் துறை என்றால் அது அறநிலையத்துறை தான் என்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மேலும் பால ராமர் கோயில் திறப்பு விழா குறித்தும் அவர் பேசியுள்ளார்.
நேற்று(ஜனவரி22) அனைத்தையும் புதிதாக கட்டப்பட்டுள்ள பால ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழா பெருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மேலும் தொலைக்காட்சிகளில் நேரலை ஒளிபரப்பும் செய்யப்பட்டது.
அவ்வாறு சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள வேணு கோபால சுவாமி கோயிலில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பார்த்தார்.
கும்பாபிஷேக விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “வேணு கோபால சுவாமி கோயிலின் அறங்காவலர் என்னை அழைத்தார்கள். அதனால் நான் இங்கு வந்தேன். எத்தனையோ கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ராமருக்கு செருப்பு மாலை அணிவித்துள்ளார்கள். இது போல பல சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்த முறை அமைதியான முறையில் ஆலயத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்று வந்தது. அதில் பெரிய பிரச்சனையை உருவாக்கி தமிழகத்தில் மக்களிடையே எழுச்சியை உருவாக்கியது திமுக கட்சி தான்.
தற்போதைய தமிழக அரசு மக்களின் நம்பிக்கைக்கும் இந்து மக்களுக்கும் எதிராக செயல்படுகின்றது என்பதை மீண்டும் ஒரு முறை காட்சிபடுத்தியிருக்கின்றது. வரும் 2024 தேர்தலில் தமிழக மக்கள் திமுக கட்சிக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.
ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும், அன்னதானம் செய்வதற்கும், சிறப்பு பூஜைகள் செய்வதற்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என்று அறநிலையத்துறை வாய் வழியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போல தமிழக காவல் துறையும் அறநிலையத்துறை கூறியதற்கு ஏற்ப நடக்கின்றது.
தமிழகத்தில் தேவையே இல்லாமல் ஒரு துறை இயங்குகின்றது என்றால் அது அறநிலையத்துறை தான். 2026ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கட்சி ஆட்சிக்கு வரும் பொழுது தமிழகத் துறைகளில் அறநிலையத் துறை என்பது இருக்காது.
தமிழகத்தில் தடை இருந்தாலும் சென்னையில் பாஜக கட்சி சார்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது” என்று கூறினார்.
Exit mobile version