பொதுவாக பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்றால் நாம் பிறந்த ஆங்கில தேதியில் தான் பெரும்பாலும் கொண்டாடி வருகிறோம். ஆனால் நாம் பிறந்த நாளன்று என்ன நட்சத்திரம் இருந்ததோ அந்த நட்சத்திரத்தில் தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும். அதாவது நாம் பிறந்த தமிழ் மாதம் மற்றும் நட்சத்திரத்தை கணக்கில் கொண்டு தான் பிறந்தநாள் என்பதை கொண்டாட வேண்டும்.
நமது முன்னோர்கள் ஒருவரின் பிறப்பு என்பதை நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டும், இறப்பு என்பதை திதியை அடிப்படையாகக் கொண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேபோன்று நமது பிறந்த நட்சத்திரம் எந்த நேரத்தில் வருகிறதோ அந்த நேரத்தில் கொண்டாடிக் கொள்ளலாம். அதாவது நமது நட்சத்திரம் காலையில் வந்தால் காலை நேரத்திலும், மாலை வந்தால் மாலை நேரத்திலும் கொண்டாடிக் கொள்ளலாம்.
பொதுவாக பிறந்தநாள் என்றாலே கேக் வெட்டி தான் அனைவரும் கொண்டாடுவோம். ஆனால் அந்த பழக்கம் நமது நாட்டின் பழக்கம் கிடையாது. அது மேலை நாடுகளில் பழக்கவழக்கங்கள் ஆகும். நமது நாட்டின் பழக்கமானது விளக்கு ஏற்றி வழிபடுவது தான். பிறந்தநாள் அன்று விளக்கினை ஏற்ற வேண்டுமே தவிர அணைக்க கூடாது. அதாவது கேக் வெட்டும் பொழுது ஒளியை அணைத்து கொண்டாடுவது மிகவும் தவறானது. மெழுகுவர்த்தி ஏற்றாமல் வேண்டுமானால், கேக் வெட்டி கொண்டாடிக் கொள்ளலாம்.
பிறந்தநாள் அன்று காலை எழுந்ததும் குளித்துவிட்டு, திருநீரை நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு முதலில் நம்மை பெற்ற தாய் தந்தையரை தான் முதலில் வணங்க வேண்டும். அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய பிறகு, நமது வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு இனிப்பினால் ஆன பொருளால் நெய்வேத்தியம் செய்ய வேண்டும். பிறந்தநாள் கொண்டாடுபவர் முதலில் அந்த இனிப்பு பொருளை தான் உண்ண வேண்டும். அதன் பிறகு எப்பொழுதும் போல நமது வேலைகளை செய்யலாம்.
முடிந்தால் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு, அதன் பிறகு நம்மால் முடிந்த அளவிற்கு யாருக்கேனும் அன்னதானம் வழங்குவது மிகவும் சிறப்பு. பிறந்தநாள் கொண்டாடுபவர் கையால் அன்னதானம் கொடுக்கும் பொழுது அவருக்கு கிடைக்க கூடிய வாழ்த்து என்பது மிகவும் சிறப்பிற்குரிய ஒன்று.
அதேபோன்று பிறந்த நாளன்று எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. பொதுவாக பிறந்த கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என்றும் கூறுவார்கள். முடி வெட்டுவது, நகம் வெட்டுவது இது போன்ற செயல்களையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. கோவில்களுக்கு சென்று நமது பெயர் மற்றும் நட்சத்திரத்தைக் கூறி அர்ச்சனை செய்து கொள்ளலாம். இல்லையென்றால் கடவுளின் பெயரிலும் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
ஆடம்பர முறையில் யாருக்கும் பயனில்லாமல் பிறந்தநாள் கொண்டாடுவதை காட்டிலும், இந்த எளிய முறையில் பிறருக்கும் உதவி பிறந்தநாள் கொண்டாடுவது மிகவும் சிறப்பானது.