புலம்பெயர் தொழிலாளர்கள் விடயத்தில் என்ன செய்தீர்கள்: மாநில அரசுகளை கடுமையாகச் சாடும் உச்சநீதிமன்றம்!

0
122

கொரோனா ஊரடங்கினால், அந்தந்த மாநிலங்களில் வேலை பார்க்கும் மற்ற மாநில புலம்பெயர் தொழிலாளர்களுக்கு(Migrant Workers) என்னென்ன வசதிகள் செய்து கொடுத்தீர்கள் என உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளது.

 

புலம்பெயர் தொழிலாளர்கள் விடயத்தில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை எந்த ஒரு மாநில அரசுகளும் சரியாகப் பின்பற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பின்பற்றாததற்கு காரணம் என்ன? என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் கேள்வி எழுப்பியதுடன், பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

 

கொரோனா தொற்றினால் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மற்ற மாநிலங்களில் வேலை செய்யவந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல், வாழ்வாதாரம் இன்றி தவித்தனர். மேலும் அவர்கள் சொந்த மாநிலம் செல்லவும், நடைபயணமாகவே நெடுஞ்சாலைகள் மார்க்கமாக சென்றனர்.

 

இப்படி சென்றவர்களில் சிலர் சாப்பிட உணவு கிடைக்காமலும், வெயிலில் சோர்ந்து உணவின்றியும், சிலர் வாகனங்களில் அடிபட்டும் இறந்து போயினர். இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கினை பதிவு செய்து எடுத்துக்கொண்டது.

 

இதனடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசுகள், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும், அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல இலவசமாகவே போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தரவும், மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய ஆவணங்களையும் தயார் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.

 

 

இதன் அடிப்படையில் எந்த ஒரு மாநிலமும் உச்ச நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என உச்ச நீதிமன்றத்திலேயே அளித்த புகார் மனுவின்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவின் விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், 3 வாரத்திற்குள்ளாக அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க வேண்டும் என

உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் பேரில் கேட்கப்பட்ட கேள்விகள்,

 

புலம்பெயர் தொழிலாளர்களின் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதா? அவர்களுக்காக செய்யப்பட்ட வசதிகள் என்னென்ன? மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநிலங்களில் கொடுக்கப்பட்ட வேலைகள் தொடர்பான அறிக்கைகள் என்ன என்பதைப் பற்றி விரிவாக பதில் மனுவில் அளிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கினை ஒத்தி வைத்தனர்.