காவி நிறத்திற்கு மாற்றியதில் என்ன தவறு..?? தூர்தர்ஷன் லோகோ சர்ச்சைக்கு ஆதரவு தெரிவித்த தமிழிசை..!!
மத்திய அரசின் தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் நிறுவனத்தின் சேனல்கள் அனைத்தும் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டன. குறிப்பாக தூர்தர்ஷன் நிறுவனத்தின் முக்கிய அங்கமான டிடி நியூஸ் சேனலின் லோகோவை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றினார்கள். இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதி தான் இது என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இதற்கு தமிழிசை செளந்தரராஜன் ஆதரவு தெரிவிக்கும் விதமாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “காவி என்பது தியாகத்தின் வண்ணம். நம் தேசியக்கொடியின் முதன்மை வாய்ந்த வண்ணம் காவி.
எனவே டிடி நியூஸ் சேனலின் லோகோவை காவி வண்ணத்தில் மாற்றியதில் எந்த தவறும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் டிடி பொதிகை என்ற பெயரை டிடி தமிழ் என்று மாற்றி தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளனர். இது நமக்குதானே பெருமை” என கூறியுள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய சமயத்தில் தூர்தர்ஷன் நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்திருந்தது. அதன்படி, பிரசாத் பாரதியின் தலைமை செயல் அலுவலர் இதுகுறித்து கூறியிருப்பதாவது, “தூர்தர்ஷன் லோகோவின் வண்ணத்தை பாஜகவுடன் தொடர்புப்படுத்தி பேசுவது மிகவும் தவறு. அது காவி நிறமல்ல. ஆரஞ்சு” என விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.