தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார், அதோடு கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை தரமணியில் இருக்கின்ற எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதுரா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் அறிவியல் குறித்து இதுவரையில் 3000 நபர்களுக்கு பயிற்சி வழங்கிவருகின்றது. இந்த வருடமும் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அறிவியல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு குழந்தையின் ஒவ்வொரு விஞ்ஞானி என்ற திட்டத்தை மாவட்டம்தோறும் எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருக்கிறார்.
அதோடு நோய்த்தொற்றை விடவும், கற்றல் குறைபாடு மிக பெரிய தொற்றாக இருக்கிறது என்பது கல்வி வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் இந்த விஷயத்தில் உடனடியாக முடிவு எடுக்க இயலாது. தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு துறையிலும் முடிவுகள் அனைத்தும் கவனமாக மேற்கொள்ளப்படுகின்றன. எடுக்கின்ற முடிவுகள் விமர்சனம் வந்து விட்டால் கூட பரவாயில்லை, எந்த ஒரு குழந்தையும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தெளிவாகவும், கவனமாகவும் இருந்து வருகின்றோம்.பெற்றோர்கள், மாணவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், உள்ளிட்டோரின் கருத்துக்களை உள்ளடக்கி பின்னரே பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எந்த ஒரு முடிவையும் அறிவிப்பார் என குறிப்பிட்டிருக்கிறார் அமைச்சர்.
ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அரசின் அறிவிப்பு வெளியாகும் சமயத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பும் இடம் பெற்று வருகின்றது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக எல்லா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கியிருக்கிறோம். அதனடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளிவரும் போது பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார்.