எல்கேஜி யுகேஜி மாணவர்கள் சேர்க்கை எப்போ? பெற்றோர்கள் ஏமாற்றம்!அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

0
162
When LKG and UKG Admission in Tamilnadu

எல்கேஜி யுகேஜி மாணவர்கள் சேர்க்கை எப்போ? பெற்றோர்கள் ஏமாற்றம்!அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. சுமார் 2 ஆயிரத்து 381 பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்காக ஏராளமான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். இதனிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன.

எல்கேஜி, யூகேஜி மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையைத் தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அதைத் தொடர்ந்து, அரசு பள்ளிகளிலேயே மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், அதற்காக 2,500 சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் கடந்த 9-ஆம் தேதி பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்தார். ஆனால், அதன்பின் 19 நாட்களாகி விட்ட நிலையில், 2381 அரசு பள்ளிகளில் ஒன்றில் கூட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு இன்னும் மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை.

நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்புகள் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. எனவே குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கலாம் என காத்திருந்த பெற்றோர், தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் ஆரம்பிக்கப்படவுள்ள மழலையர் வகுப்பிற்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிகல்வித்துறை அறிவித்தது.

ஆனால் அதற்கான பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை.எனவே, ஆகஸ்ட் மாதம் முதல் அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அலுவலர் கூறியுள்ளார்.