Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காலை கண்விழித்ததும் முதலில் இந்த பொருளை பாருங்கள்..!! சந்திராஷ்டம நாளும் சந்தோஷமான நாளாக மாறும்..!!

பொதுவாக காலை நேரங்களில் நமது உடலில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு வெளிப்படும். நமது உடலில் உள்ள நெருப்பை குறிக்கக் கூடியது நம்முடைய கண்கள் தான். காலை கண் விழித்ததும் முதலில் நாம் எந்த ஒரு பொருளை பார்க்கின்றோமோ, அந்த பொருளினுடைய கிரக வடிவ குணங்களை தான் அந்த நாள் முழுவதும் நாம் அனுபவித்து ஆக வேண்டும் என்பது நியதி.

இதனை நமது முன்னோர்கள் சாஸ்திர சம்பிரதாயங்களாக நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள். ஆகையால் காலையில் நாம் கண்விழித்ததும் முதலில் எந்த பொருளை பார்க்கின்றோமோ, அந்த பொருளின் கிரகத் தன்மைகளை தான் நாம் அந்த நாள் முழுவதும் கொண்டிருப்போம் என்பது உண்மை.

பொதுவாக நாம் தினமும் கண் விழித்ததும் பார்க்கக்கூடிய முதல் இடம் நமது வீட்டின் கழிவறை தான். அந்த கழிவறை என்பது சந்திர பகவான் முழுமையாக நீச்சம் அடையக்கூடிய ஒரு இடமாகும். எனவே இந்த இடத்தை நாம் காலை எழுந்ததும் முதலில் பார்க்கும் பொழுது, அந்த நாள் முழுவதும் மன அழுத்தம் தான் அதிகம் இருக்கும்.

எனவே தினமும் காலை எழுந்ததும் சூரிய சந்திரனின் வடிவாக திகழக்கூடிய நமது கண்கள் நல்ல பொருளை மட்டுமே பார்க்க வேண்டும். அவ்வாறு பார்த்தால் முழுமையாக கிரக தோஷங்கள் நீங்கி, நல்ல உணர்வுகளையும், புத்துணர்ச்சிகளையும் நாம் பெற முடியும்.

1. வலது உள்ளங்கை:
இதன் அடிப்படையில் காலை எழுந்ததும் முதலில் நமது வலது உள்ளங்கையை பார்க்கலாம். ஹஸ்தம் என்று சொல்லக்கூடிய நமது வலது உள்ளங்கையில் தான் சரஸ்வதி தேவி குடியிருப்பதாக கூறப்படுகிறது. நமது வலது உள்ளங்கையில் மருதாணியும் சேர்ந்து இருக்கும் பொழுது சரஸ்வதி தேவியும், லட்சுமி தேவியும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

2. நிறை சொம்பு தண்ணீர்:
நாம் காலை எழுந்ததும் நிறை தண்ணீருடன் இருக்கக்கூடிய சொம்பை பார்க்கும் பொழுது நமது உடலில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்குவதாக நம்பப்படுகிறது.

3. நன்கு மலர்ந்த பூக்கள்:
நாம் இரவில் தூங்குவதற்கு முன்பு மொட்டாக இருக்கக்கூடிய பூக்களை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து விட்டோம் என்றால், அது மறுநாள் காலையில் மலர்ந்த பூக்களாக மாறி இருக்கும். அதனை நாம் கண்விழித்ததும் பார்க்கும் பொழுது அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

4. மஞ்சள்:
மஞ்சள் அல்லது மஞ்சள் தூளை காலை நாம் கண்விழித்ததும் பார்க்கும் பொழுது நிறைவான பலன்கள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

5. முகம் பார்க்கும் கண்ணாடி:
கண்ணாடி என்பதற்கு துர் சக்திகளை நீக்கக்கூடிய ஆற்றல் என்பது உண்டு. எனவே காலை எழுந்ததும் கண்ணாடியில் நமது முகத்தையே பார்க்கும் பொழுது அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், நிறைந்த பலன்களை தரக்கூடிய நாளாகவும் இருக்கும்.

6. தங்க நகை:
பெரும்பாலான பெண்கள் இரவு தூங்குவதற்கு முன்பு அவர்கள் அணிந்திருக்கக் கூடிய மோதிரம், வளையல்கள் ஆகியவற்றை கழட்டி வைத்துவிட்டு தான் தூங்குவார்கள். அந்த தங்க நகைகளை காலை கண் விழித்ததும் பார்க்கும் பொழுது அந்த நாள் முழுவதும் மேன்மையான நாளாக விளங்கும்.

7. கணவன்- மனைவி முகம்:
காலை கண்விழித்ததும் கணவன் மனைவி முகத்தையோ, அல்லது மனைவி கணவன் முகத்தையோ பார்க்கும் பொழுது அந்த நாள் முழுவதும் வசீகரமான நாளாக திகழும். வீட்டில் உள்ள சிறு குழந்தைகளின் முகத்தை பார்ப்பதும் சிறப்பாக இருக்கும்.

இந்த பொருட்கள் அனைத்தையும் நாம் கண்விழித்ததும் பார்க்கின்ற பொழுது அந்த நாள் முழுவதும் சுபமான, நிறைவான நாளாக அமையும். அதிலும் குறிப்பாக சந்திராஷ்டமம் இருக்கக்கூடிய நாட்களில் இந்த மங்களப் பொருட்களை நாம் பார்க்கும் பொழுது, துன்பங்கள் நிறைந்த நாளும் சந்தோஷங்கள் நிறைந்த நாளாக மாறி இருக்கும்.

Exit mobile version