Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக விழும்போதெல்லாம் பாமக தோள் கொடுத்தது – பாமக வழக்கறிஞர் கே.பாலு பரபரப்பு பேட்டி

K Balu PMK

K Balu PMK

அதிமுக விழும்போதெல்லாம் பாமக தோள் கொடுத்தது – பாமக வழக்கறிஞர் கே.பாலு பரபரப்பு பேட்டி

அதிமுக விழும்போதெல்லாம் உயிர் கொடுத்த பாமகவின் செயல்பாடுகளை எப்போதும் மறக்கக் கூடாது. பாமக பற்றி ஜெயக்குமார் தெரிவித்த கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமி தான் விளக்க வேண்டும் என பாமகவின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு தெரிவித்தார்.

புத்தாண்டையொட்டி நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “அதிமுக நான்காக உடைந்துள்ளது” என்று அக்கட்சியினரை ஊக்குவிக்கும் வகையில் பேசியிருந்தார். இத்துடன் திமுக மீதான விமர்சனம், பாஜகவின் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரை மறைமுகமாகவும் விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவால் தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி பதவி கிடைத்துள்ளது என்பதை மனதில் வைத்துப் பேசவேண்டும். அதிமுக தயவு இல்லையென்றால், பாமக என்ற கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரமே கிடைத்திருக்காது” என்று விமர்சித்து பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து கருத்து தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின் வெளியில் பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “1996 இல் அதிமுக நான்கு எம்எல்ஏக்களுடன் பலவீனப்பட்டு இருந்த நிலையில், அப்போது பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா தான், பாமக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி பற்றி பேசி 1999 தேர்தலைச் கூட்டணியுடன் சந்தித்தார். அதிமுக விழும்போது எல்லாம் பாமக தோள் கொடுத்துள்ளது. ஆனால் அதிமுகவின் வெற்றிக்கு பாமக தான் காரணம் என எப்போதும் சொல்லிக்காட்டியதில்லை.

மைனாரிட்டி திமுக என அதிமுகவால் விமர்சிக்கப்பட்ட போது கூட, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு அளித்த பாமக, கருணாநிதி முதல்வராக நாங்கள் தான் காரணம் என சொல்லியதில்லை. பாமகவிற்கு இடம் ஒதுக்குவது குறித்து பேச ஜெயக்குமார் யார்? நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போல ஜெயக்குமார் பேசி இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம், தருணம், சூழல் தற்போது இல்லை. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

பாமக பற்றிய அதிமுக கருத்தை தான் ஜெயக்குமார் கூறினாரா? என்பது பற்றி எடப்பாடி பழனிசாமி தான் விளக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சியை 2 ஆண்டுகள் தொடர்ந்ததற்கும், ஜெயகுமார் அமைச்சராக நீடித்ததற்கும் நாங்கள் தான் காரணம் என்பதை எப்போதும் சொல்லியதில்லை.

அதிமுக வீழ்ந்தபோதெல்லாம் உயிர் கொடுத்த பாமகவின் செயல்பாடுகளை எப்போதும் மறக்கக் கூடாது. பாமக பற்றிய ஜெயக்குமார் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமி தான் விளக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

Exit mobile version