ஹைதி அதிபர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை!
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் ஜோவெனல் அதிபர் மாய்சே நேற்று போர்ட்டொ பிரின்ஸ் நகரிலுள்ள அவரது தனியார் குடியிருப்பு வளாகத்தில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி மார்ட்டின் மாய்சே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவலை ஹைதி நாட்டின் இடைக்கால பிரதமர் ஜோசப் உறுதிப்படுத்தியுள்ளார். இதை மனிதத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார். தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அரசாங்கத்தை தொடர்ந்து வழிநடத்தவும் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஹைதி அதிபர் படுகொலைக்கு அமெரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்புச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது மிகவும் துக்கமான நிகழ்வு என்று கூறியுள்ளது.
அதேசமயம் மிகக் கொடூரமான குற்றம் என்றும் கூறியுள்ளார். ஹைதி நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு சார்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும், ஹைதி அரசுக்கு தேவையான எந்த விதமான உதவியும் வழங்க அமெரிக்கா எப்போதும் தயாராக உள்ளதாகவும் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.