டாஸ்மாக் நீதிமன்ற தீர்ப்பு மக்கள் நீதி மய்யம் தொடுத்த வழக்கினாலா! – உண்மை என்ன?

0
120

டாஸ்மாக் நீதிமன்ற தீர்ப்பு மக்கள் நீதி மய்யம் தொடுத்த வழக்கினாலா! – உண்மை என்ன?

மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலிலிருந்த நிலையில், கடந்த 3ம் தேதியிலிருந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பல எதிர்ப்புகளை மீறிக் கடந்த 7ம் தேதி சென்னையைத் தவிர்த்துப் பிற இடங்களில் மதுக்கடைகளைத் திறந்தது தமிழக அரசு. மதுக்கடைகளைத் திறக்க பல்வேறு விதிமுறைகளை உயர் நீதிமன்றம் விதித்திருந்த நிலையில், அவை எதையுமே பெரும்பாலான கடைகளில் பின்பற்றாத காரணத்தால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதி மன்றம், டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஊரடங்கு முடியும் வரை ஆன்லை மூலம் மட்டுமே மதுக்களை விற்க அனுமதியளித்தது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் தாங்கள் தொடுத்த வழக்கினால் பெற்ற வெற்றி என உரிமை கொண்டாடியது.

டாஸ்மாக் நீதிமன்ற தீர்ப்பு மக்கள் நீதி மய்யம் தொடுத்த வழக்கினாலா? நிச்சயம் இல்லை. முதல் வழக்கு ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடுத்த வழக்கு. இதில்தான் விற்பனையை ஒழுங்குபடுத்தும் உத்தரவு வந்தது. மறுநாள் விற்பனையை ரத்து செய்து வந்த உத்தரவு, மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கினால் என்று கூறப்படுகிறது. மேலும், அவர்கள் வழக்குத் தொடுத்ததால்தான் இது அவசர வழக்காக எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இது தவறான தகவல். சென்னை உயர்நீதிமன்றம் இரண்டாவது முறை வழக்கை அவசரமாக விசாரிக்கக் காரணம், டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கே. உயர்நீதிமன்றம் ஏற்கனவே விதித்த நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்று தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வந்துள்ளது. அதனால்தான் உயர்நீதிமன்றம் அவசர வழக்காக இதை எடுத்து விசாரித்தது.

இது போக டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று தொடரப்பட்ட பல வழக்குகளில் மக்கள் நீதி மய்யத்தின் வழக்கும் ஒன்று. மக்கள் நீதி மய்யம் இந்த வழக்கைத் தொடராவிட்டாலும், இந்த தீர்ப்பு வந்திருக்கும். தீர்ப்பில் ம.நீ.ம வழக்கறிஞர் பெயர் இருக்கிறது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இது போல ஒரே விஷயத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டால் பேட்ச் வழக்குகள் என்று கூறப்படும். அனைத்து வழக்குகளைத் தொடர்ந்த வழக்கறிஞர்களின் பெயரும் தீர்ப்பில் இருக்கும். அனைவர் பெயரும் இருக்கிறது என்பதற்காக வழக்கு தொடர்ந்த அனைவரும் என்னால்தான் தீர்ப்பு என்று சொல்லிக் கொள்வது சிறுபிள்ளைத்தனம்.

மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பாகத் தொடரப்பட்ட மனு குறித்து ஒரே ஒரு இடத்தில் கூட தீர்ப்பில் விவாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை மறைத்து கமலினால் தான் இந்த வழக்கே நடைபெற்றது போல் சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கப்பட்டு வருவது நகைப்புக்குரிய விஷயமாக உள்ளது.