தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்கிறது. அடுத்த முறையும் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் அதிமுகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை தட்டித்தூக்கும் முயற்சியில் திமுகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, டிடிவி தினகரன் தலைமையில் அமமுக+தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என இந்த முறை சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.
தமிழகம் முழுவதும் மக்கள் மனநிலை குறித்து பல்வேறு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பிரபல செய்தி சேனலான புதிய தலைமுறை நடத்திய கருத்துக்கணிப்பில், அதிக பட்சமாக 158 தொகுதிகளை கைப்பற்றி திமுக தான் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 151 முதல் 158 வரையிலான தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும், ஆளும் அதிமுக அரசுக்கு 76-83 வரையிலான இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பலமுனை போட்டி ஏற்பட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு, 38.51 சதவீத மக்கள் திமுகவிற்கு தான் தங்கள் வாக்கு என பதிலளித்துள்ளனர். அதிமுகவிற்கு 28.39 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இருகட்சிகளிடையே வெறும் 10 சதவீத வித்தியாசம் மட்டுமே நிலவுகிறது. கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 6.28 சதவீத வாக்குகளும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 4.84 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு திமுக கூட்டணிக்கு தான் வாக்களிப்போம் என 38.20 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என 28 .48 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்திற்கு 6.30 சதவீதமும், நாம் தமிழர் கட்சிக்கு 4.84 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வர வேண்டும் என 37.51 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 37.51% பேர் ஸ்டாலினே முதல்வராக வரவேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு 28.33%, கமல்ஹாசன் – 6.45%, சீமான் – 4.93%, சசிகலா – 1.33% பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.