அடுத்த முதல்வர் இவர்தான? பரபரப்பில் கட்சித் தலைமையகம்!
செம்பனார்கோவிலில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் தொகுதி எம்எல்ஏ-வும் மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனைதான் ஒவ்வொரு விழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார் என்றும் . திராவிட மாடல் ஆட்சி என்பது சுயமரியாதை, சமூகநீதி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, பெண் விடுதலை போன்றவைகள் தான் திராவிட மாடல். இந்த ஆட்சி தான் தற்போது தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினால் செய்யப்பட்டு வருகிறார் என்றும் கூறினார்.
அதேபோல் சட்டமன்றத்தில் அமைச்சர்கள் முதலமைச்சரை பாராட்டி பேசினால் மு.க.ஸ்டாலின் வெளியில் சென்றுவிடுவார். மக்கள் வாக்களித்து சட்டமன்றத்திற்கு அனுப்பிவைத்தது முதலமைச்சரைப் பாராட்டுவதற்கு அல்ல என்றும் மக்களின் பிரச்னையை பேசுவதற்கு மட்டும் தான் என்றும் கூறுவார். அதனால் நாங்கள் முதலமைச்சரை பாராட்டுவது கிடையாது என்றும் ஆனால் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே தற்போது முதலமைச்சரை பாராட்டி வருகிறார்கள் என்று பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் இளைய சமுதாயத்தை பட்டை தீட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திராவிட மாடல் பாசறைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். வருங்காலத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி செய்ய போகிறவர் உதயநிதி ஸ்டாலின் தான் என்றும் தெரிவித்தார்.மேலும், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்க போவது நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.