பக்ரீத்னா என்ன?
பக்ரா – ஆடு. ஈத் – பண்டிகை.
இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் முதலாவது – ரமலான் எனப்படும் ஈகைத் திருநாள் (ஈதுல் ஃபித்ர்). இரண்டாவது பண்டிகை – தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் (ஈதுல் ஸுஹா).
ஏன் இது தியாகத் திருநாள் என அழைக்கப்படுகிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.
சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களை, தன் மனைவியையும் மகன் இஸ்மாயிலையும் வறண்டு கிடந்த அரேபியப் பாலைவனத்துக்குக் கொண்டுவரும்படி பணித்தான் இறைவன். இப்ராகிம் அவர்கள் அதன்படியே அவர்களைக் கொண்டு சென்று பாலைவனத்தில் விடுகிறார். தண்ணீர் இல்லாமல் தவித்த இஸ்மாயிலின் தாய் , அங்கிருந்த இரண்டு மலைகளுக்கும் இடையே ஓடி ஓடி இறைவனை வேண்டுகிறார். களைத்துப் போய் மயங்கி விழுகிறார். இறைவன் கட்டளைப்படி, இஸ்மாயிலின் காலடியில் வானவர் ஜிப்ரேல் ஒரு நீரூற்றை உருவாக்குகிறார். நீர் பீறிட்டு வந்ததும், தாயார் ஜம்-ஜம் (நில் நில்) என்கிறார். அதுவே இன்று மெக்காவில் ஜம்ஜம் நீரூற்றாகத் திகழ்கிறது. வழிப்போக்கர்களுக்கு அந்த நீரை பண்டமாற்றுச் செய்து நாட்களைக் கழிக்கிறார்கள் தாயும் மகனும்.
ஆண்டுகள் கழிகின்றன. நீரூற்று அமைந்துள்ள இடத்தில் ஒரு வழிபாட்டிடத்தைக் கட்டுமாறு இப்ராகிமுக்கு ஆணையிடுகிறான் இறைவன். அதன்படி கட்டப்பட்ட கட்டிடம்தான் இன்று மெக்காவில் லட்சக்கணக்கில் மக்கள் கூடும் காபா எனப்படும் தொழுகையிடம்.
இறைத்தூதர் இப்ராகிம், அப்பகுதியில் இருந்த நாடோடி மக்களை இறைநம்பிக்கை கொள்ளச் செய்கிறார். வறண்டு கிடந்த பாலையில் ஜம்ஜம் நீரூற்றின் காரணமாக மெக்கா புகழ்பெற்ற நகரமாகிறது. (அந்த ஜம்ஜம் நீரூற்று இப்போதும் தீராமல் நீரை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஹஜ் பயணிகள் ஜம் ஜம் நீரை அருந்துவதோடு, புனித நீராக ஊருக்கும் கொண்டு செல்கிறார்கள்.)
இப்ராகிமை மேலும் சோதிக்க விரும்பிய இறைவன், அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றை தியாகம் செய்ய ஆணையிடுகிறான். அவருக்கு விருப்பமான மகனை தியாகம் செய்ய அவர் புறப்பட்டபோது, சைத்தான் அவரைத் தடுக்க முயல்கிறான். சைத்தானை கல்லெடுத்து விரட்டுகிறார் இப்ராகிம். அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான் மெக்காவுக்குச் செல்லும் ஹஜ் பயணிகள் சிறு கற்களை எடுத்து சைத்தானைக் குறிக்கும் தூண்களின்மீது எறிகிறார்கள்.
இறைவன்மீது தனக்குள்ள முழு நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் தன் மகனை தியாகம் செய்யுமாறு இப்ராகிம் கனவில் இறைவன் கட்டளையிடுகிறான். இறைத்தூதர் என்றாலும், மகனிடம் கேட்காமல் இதைச் செய்யக்கூடாது எனக் கருதினார். மகனிடம் இறைவனின் விருப்பத்தைக் கூறினார். மகனோ, சற்றும் தயங்காமல், தந்தையே, தங்களுக்குக் கிடைத்த ஆணைப்படி செய்யுங்கள், என்றான். மகனைப் பலிகொடுக்க முழுமையாகத் தயாராகி விட்டபோது, இருவரின் இறைநம்பிக்கையையும் புரிந்து கொண்ட இறைவன், மகனுக்குப் பதிலாக ஒரு ஆட்டினைப் பலிகொடுக்குமாறு ஆணையிடுகிறான்.
(பைபிளின்படி இப்ராகிம் – ஆபிரகாம். இஸ்மாயிலுக்கு பதிலாக ஈசாக்)
பக்ரா என்றால் ஆடு, ஈத் என்றால் பண்டிகை. ஆட்டைப் பலிகொடுக்கும் பண்டிகை என்பதால் இது சுருக்கமாக இந்தியாவில் பக்ரீத் என அழைக்கப்படுகிறது. தமிழிலும் இதுவே நிலைபெற்று விட்டது. அரபி மொழியில் தியாகத் திருநாள் எனப் பொருள் தரும் வகையில் ஈத்-உல்-அதா எனப்படுகிறது. அரபி மொழியில் குர்பான் என்றால் தியாகம் என்று பொருள். அதே சொல் பிற மொழிகளிலும் நிலைத்து, குர்பான் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில், ஈதுல்-அதாவை முன்னிட்டு மெக்காவுக்குப் புனித யாத்திரை மேற்கொள்வதும் ஒரு கடமையாகும். ஆனால் இது கட்டாயமல்ல, பொருள் வசதியும் உடல்நலமும் உள்ளவர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய பயணமாகும்.
மெக்காவுக்குப் புனித யாத்திரை செய்யும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நாளில் சிறப்புத் தொழுகை நடத்துகிறார்கள். உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களும் பள்ளிவாசல்களில் அல்லது ஈத்கா மைதானங்களில் கூடி, சிறப்புத் தொழுகை நடத்துகிறார்கள். இறை நம்பிக்கையை உறுதி செய்கிறார்கள்.
இப்ராகிம் அவர்கள் தியாகம் செய்தது போலவே தாமும் செய்ய முன்வந்து ஆட்டினை குர்பான் கொடுக்கிறார்கள். இவ்வாறு குர்பான் கொடுக்கப்படும் ஆட்டின் இறைச்சியை மூன்றாகப் பிரிக்கிறார்கள். ஒரு பகுதி குடும்பத்துக்கு, மற்றொரு பகுதி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், மூன்றாவது பகுதி ஏழை எளியவர்களுக்கு. அதாவது, பக்ரீத் நாளை ஏழை எளியவர்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வழி செய்கிறது இஸ்லாம்.
இந்த தியாகத் திருநாளை அண்டை அயலாருடனும், ஏழை எளியவர்களுடனும் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.