அவர்களை அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு தாமதம்? மம்தா ஆவேசம்!
உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்காமல் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் உக்ரைன் நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் காரணமாக, உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை உக்ரைன் நாட்டினர் பத்து லட்சம் பேர் வரை அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைன் நாட்டில் பல வெளிநாட்டினர் உள்பட இந்தியர்கள், இந்திய மாணவர்கள் பலர் சிக்கித் தவித்து வருகிறார்கள்.
இதனால், மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கி தவித்து வரும் மாணவர்களை உடனடியாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களின் உயிரைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். உயிர் மிகவும் விலைமதிப்பற்றது. அவர்களை அழைத்து வருவதற்கு ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறது? ஏன் முன்னதாகவே நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என மத்திய அரசை விமர்சித்துள்ளார் மம்தா.
மேலும், மாணவர்கள் உள்பட இந்தியர்களை அழைத்துவர உடனடியாக போதுமான எண்ணிக்கையிலான விமானங்களை ஏற்பாடு செய்து, அனைத்து மாணவர்களையும் விரைவில் இந்தியா அழைத்து வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.