Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வர் வாழ்த்து சொல்வதில் ஏன் பாரபட்சம் காட்டுகிறார்! தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

மதச்சார்பற்ற தன்மையை தமிழக முதலமைச்சரும் கடைபிடிக்க வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கோவையில் தெரிவித்திருப்பதாவது, இணையதள ரம்மி சூதாட்டம் நடைபெற கூடாது என்பது எல்லோருக்கும் பொதுவான கருத்தாக இருக்கிறது. ஏன் தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்திருக்கிறார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். என்னிடமும் சில சட்ட முன் வடிவுகள் நிலுவையில் இருக்கின்றன. மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? என்பதை பார்த்து தான் கையெழுத்து போட வேண்டும்.

ஆளுநருக்கு கையெழுத்து போட உரிமை இருக்கிறது என்பதை போலவே மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? என்பதை தெரிவிக்கும் உரிமையும் இருக்கிறது. மக்களை சார்ந்து தான் ஆளுநர்கள் இருக்கிறார்கள், ஆனால் அது புரியாமல் இங்கேயும் சிலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். மக்களை ஆளுநர்கள் சந்திக்கலாம், ஆகவே பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

யார் அரசிடம் பணிபுரிந்தாலும் மக்களுக்கான பணியாக இருக்க வேண்டும் தமிழக ஆளுநர் ஒரு மதத்தைச் சார்ந்து உரையாற்றினாரா? என்று எனக்கு தெரியவில்லை. அது நம்முடைய பார்வையில் தான் இருக்கிறது. மதச்சார்பற்ற தன்மையை தமிழக முதலமைச்சரும் கடைபிடிக்க வேண்டும். முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில் ஏன் பாரபட்சம் காட்டுகிறார்? அந்த கேள்விக்கு பதில் கிடைக்கவே இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

நாங்கள் இணை அரசாங்கம் நடத்தவில்லை துணை அரசாங்கம் தான் நடத்தி வருகிறோம். அரசு என்றால் மக்களுக்கானது தான் ஆளுநர்களின் செயல்பாடுகளை முதலமைச்சர்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version