அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்தது. 18 தொகுதிகளுக்கு அதிமுகவிடம் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், டி.டி.வி.தினகரன் 60 தொகுதிகளை தேமுதிகவிற்கு அள்ளிக்கொடுத்தார்.இருந்தாலும் தொகுதிகளை ஒதுக்குவதில் இருகட்சியினர் இடையே சிறிய மனஸ்தாபம் வெடித்தது. அதனால் கோவில்பட்டியில் இருந்த டி.டி.வி. தினகரனை சந்தித்து, இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக நிர்வாகிகள் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டனர்.
கூட்டணி ஒப்பந்தத்தில் எப்போதுமே இரண்டு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தான் நேரில் சந்தித்து கையெழுத்திடுவார்கள். ஆனால் அமமுக – தேமுதிக விவகாரத்தில் டி.டி.வி. தினகரன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை அமமுக துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன், தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவனிடம் அளித்தார். விஜயகாந்தை வந்து ஒருமுறை சந்தித்து விட்டும் செல்லும் படி பிரேமலதா, சுதீஷ் அழைப்பு விடுத்ததையும் டிடிவி சட்டை செய்யவில்லை எனக்கூறப்பட்டது.
ஆனால் டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் எல்லாம் ஆயிரக்கணக்கில் குவிந்த தேமுதிக தொண்டர்களைப் பார்த்து மிரண்டுவிட்டாராம். சந்து பொந்தில் உள்ள கிராமங்களில் இருந்து கூட கேப்டன் பெயரை உச்சரித்த படி ஏராளமானோர் குவிய ஆரம்பித்துள்ளனர். இதனால் நெகிழ்ந்து போன தினகரன், தேமுதிகவிற்கு தொண்டர்கள் மத்தியில் இவ்வளவு மவுசா? என மாறியுள்ளார்.
உடனடியாக சென்னை போய் கேப்டன் விஜயகாந்தை சந்தித்துவிட்டு தான் மறுவேளை என முடிவும் செய்திருக்கிறார். அதனால் தான் கெத்து காட்டி சுற்றிக் கொண்டிருந்த தினகரன், நேற்று கையில் மலர் கொத்துடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கே சென்று கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார். அதுமட்டுமின்றி கேப்டன் பிரச்சாரத்தில் இறங்கினால் நம்ம கூட்டணிக்கு இன்னும் வெயிட்டாக இருக்கும் என கோரிக்கையும் வைத்துவிட்டு வந்திருக்கிறாராம்.