சென்னை தாம்பரத்தை அடுத்து இருக்கின்ற சேலையூர் என்ற கிராமத்தைச் சார்ந்த மனோஜ் நிதா என்ற தம்பதிகள் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு யோகேஷ், கனிஷ்கா என்ற இரு குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி மனோஜ் வழக்கம் போல தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று இருக்கிறார். ஆனால் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவர் உயிரிழந்தார்.
கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் அவருடைய மனைவி நிதா புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல மாறி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே தன்னுடைய கணவரின் பிரிவை தாங்க இயலாமல் இரவு உணவு சமைத்து விஷம் கலந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு அவரும் சாப்பிட்டு விட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சற்று நேரத்தில் நிதா வாந்தி எடுக்கவே அவருடைய மகன் யோகேஷ் தன்னுடைய பெரியப்பாவிற்கு போன் செய்து கூறிவிட்டான். உடனடியாக அங்கே வந்த குடும்பத்தினர் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் ஆபத்தான நிலையில் இருந்த நிதா உயிரிழந்தார்.
குழந்தைகள் இருவரையும் எழும்பூரில் இருக்கின்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள் அங்கேயே அந்த இரு குழந்தைகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் தற்சமயம் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கணவர் விபத்திலும் அதனை தாங்க முடியாத துயரத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டதாலும் தற்சமயம் அந்த இரண்டு குழந்தைகளும் பெற்றோர் இல்லாமல் நிற்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
விபத்தால் சிதைந்துபோன அழகிய குடும்பம்!
