விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவிற்கு டஃப் கொடுக்குமா அதிமுக?
விக்கிரவாண்டி சட்டமன் ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தனது கட்சி வேட்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதில் கலந்து கொண்டிருந்த விக்ரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் புகழேந்தி மயங்கி விழுந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட புகழேந்தி ஏப்ரல் 6 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து விக்ரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக ஏப்ரல் 8ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணைய சட்டத்தின் படி ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டிருந்தால் அங்கு ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் நாடு முழுவதும் காலியாக உள்ள 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த இடைத்தேர்தலில் தங்கள் பலத்தை கட்டுவதற்காக முனைப்புடன் தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படையில் சட்டமன்ற தொகுதிகளின் அளவீட்டில் 239 தொகுதிகளில் 221 தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் அதிமுக தனது இடத்தை இழந்துள்ளது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனது பலத்தை அதிமுக நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் திமுக தரப்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இதே போன்று அதிமுக, பா. ம.க, நாம் தமிழர் கட்சிகளும் வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அதிமுக தரப்பில் தற்போது வரை வேட்பாளரை அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் காணை ஒன்றிய செயலாளரும், விக்கிரவாண்டி முன்னாள் எம்.எல்.ஏவான முத்தமிழ்செல்வன், விக்ரவாண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் இந்த தேர்தலில் களம் இறங்குவதாக ஒரு தகவல் வெளியாகியது.ஆனால் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பதால் சி.வி சண்முகம் களமிறங்கவில்லை என அதிமுகவினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஏற்கனவே அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவான முத்தமிழ்செல்வனை வேட்பாளராக களம் இறக்கப்பட இருப்பதாக கூறுகின்றனர். இதற்கு முன்னதாக தோல்வியடைந்த முத்தமிழ் செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? இல்லையா என்பது குறித்த அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.